குருமூர்த்தி திரைவிமர்சனம்!

காணாமல் போகும் 5 கோடி ரூபாய் பணப்பெட்டியைத் தேடிப் போலீஸ் துரத்தி ஓடுவதும் பெட்டி கைமாறிக் கைமாறி கண்ணாமூச்சி ஆடுவதும் தான் கதை.

ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் எடுத்துச் செல்கிறார். செல்லும் வழியில் ஒரு கடையில் சிறு பிரச்சனை ஏற்படுகிறது.

இதில் மூன்றுபேர் திருட்டுக் கும்பல் காரில் உள்ள பணப்பெட்டியை எடுத்துச் சென்று விடுகிறார்கள். பணப்பெட்டியை தேயிலைத் தோட்டத்தில் எங்கோ மறைத்து விடுகிறார்கள். பயத்தினால் ஒருவர் மறைத்து வைத்த இடம் தெரியாமல் தவிக்க, அது இன்னொருவர் கையில் கிடைக்க இப்படி அந்தப் பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கைமாறுகிறது.

இந்நிலையில் ராம்கி போலீசில் புகார் செய்கிறார். இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையிலான போலீஸ் படை பணப்பெட்டியை தேடுகிறது. இறுதியில் பணப்பெட்டி யாரிடம் சென்றது? ராம்கிக்கு பணம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடராஜ் என்கிற நட்டி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அவர், பெரும்பாலும் ஜீப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறார். தன்னால் முடிந்த வகையில் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

ஆனால் அவரிடமிருந்து மேலும் நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்திருக்கலாம். தமிழரசி என்கிற பெயரில் நாயகியாக வருகிற பூனம் பாஜ்வா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்துள்ளார். பழைய மலர்ச்சியை முகத்தில் காண முடியவில்லை.

பாடல் காட்சிகளில் அழகாகத் தெரிகிறார். காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். கந்தசாமி என்கிற பாத்திரத்தில் வருகிறார் ராம்கி. 90களில் பார்த்த அதே தோற்றம். மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா, ரவிமரியா ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

ஓர் எளிமையான திருடன் போலீஸ் மசாலா படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குனர் கே.பி.தனசேகரன். கால மாற்றத்தில் சினிமா அடைந்திருக்கும் வளர்ச்சியை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தேவராஜ் ஒளிப்பதிவில் ஒரே சீரான தன்மையைப் படத்தில் கடைப்பிடிக்கவில்லை.

இனிமையான பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் சத்யதேவ் உதய சங்கர், பின்னணி இசையில் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறார். மொத்தத்தில் ‘குருமூர்த்தி’ சுவாரஸ்யம் குறைவு.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!