ரெயில் டிக்கெட் பரிசோதகர் தலை மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி!

மேற்குவங்காள மாநிலம் பஷிம் மதினிப்பூர் மாவட்டம் ஹாரக்பூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சுஜன் சிங் சர்தார் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் நேற்று ரெயில் நிலையத்தில் நின்று சக ஊழியருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ரெயில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் தலை மீது அறுந்து விழுந்தது.

உயர் அழுத்த மின்கம்பி தலையில் விழுந்ததில் சுஜன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், நொடிப்பொழுதில் அவர் அருகில் இருந்த தண்டவாளத்தில் சுருண்டு விழுந்தார், அவருடன் பேசிக்கொண்டிருந்த மற்றொரு ஊழியர் மின்கம்பி அறுந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடினார்.

மின்கம்பி விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் ரெயில் தண்டவாளத்தில் சுஜன் மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள், பயணிகள் சுஜனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர் சுஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் உள்ளார்.

ரெயில் நிலையத்தில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி எவ்வாறு அறுந்து விழுந்தது என்பது குறித்த விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சக ஊழியருடன் பேசிக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் சுஜன் தலை மீது உயர் மின் அழுத்த கம்பி விழுவதும் அதில் மின்சாரம் பாய்ந்து அவர் ரெயில் தண்டவாளத்தில் விழும் வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!