10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… மாண்டஸ் புயலால் அதிகரிக்கும் காற்று!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த 5-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது.

இந்த தாழ்வு மண்டலம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக நேற்று மாலை மாறும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றிரவு தான் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு “மாண்டஸ்” என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த புயல் காரைக்காலுக்கு 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு 640 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை (9-ந்தேதி) நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையே இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல் தென் மேற்கு வங்க கடலில் காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலவியது.

சென்னையை நெருங்கிவரும் இந்த புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.

11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி உள்பட 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும். சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது.

மாண்டஸ் புயல் நாளை சென்னையை நெருங்கக் கூடும் என்பதால் இன்று முதல் சனிக்கிழமை வரை தமிழகம், புதுச்சேரி, கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!