அதிகமாக டி.வி. பார்த்த சிறுவன்… பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை!

குழந்தைகளை வளர்ப்பதில் நவீன கால பெற்றோர் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டி.வி., ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு குழந்தைகள் அடிமையாகாமல் தடுப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அந்த வகையில் சீனாவில் அதிகமாக டி.வி. பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, அவனது பெற்றோர் வழங்கிய நூதன தண்டனை, தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை மாலை நேரத்தில் வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவனது பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். இரவு வருவதற்கு வெகு நேரம் ஆகும் என்பதால், வீட்டுப் பாடங்களை எழுதி முடித்துவிட்டு 8.30 மணிக்கு தூங்கச் செல்லுமாறி அவனிடம் சொல்லிச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் இரவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது அந்த சிறுவன் தனது வீட்டுப் பாடத்தை முடிக்காமல், தூங்கவும் செல்லாமல் டி.வி. பார்த்தவாறு இருந்துள்ளான். இதைப் பார்த்து கோபடைந்த சிறுவனின் தாய், அவனுக்கு தண்டனை வழங்கும் விதமாக இரவு முழுவதும் அவனை டி.வி. பார்க்க வைத்துள்ளார்.

மேலும் சிறுவனுக்கு வழங்கப்பட்ட இந்த நூதனை தண்டனையை அவனது பெற்றோர் வீடியோ பதிவு செய்து, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இரவு முழுவதும் சிறுவனை தூங்க விடாமல், அவனது பெற்றோர் அவனை மாறி மாறி கண்காணித்துக் கொண்டிருந்தது அதில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு காலை 5 மணி வரை சிறுவனை தூங்க விடாமல் டி.வி. பார்க்க வைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதற்கு கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.

பெற்றோரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது எனவும், இது அந்த சிறுவனை மனதளவில் பாதிக்கக் கூடும் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுவே பழக்கமாகி அந்த சிறுவன் இரவில் வெகு நேரம் தூங்காமல் இருக்கத் தொடங்கி விட்டால் என்ன ஆவது? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!