இறுக்கமாக கட்டு போட்டதால் ரத்த ஓட்டம் நின்றது- கால்பந்து வீராங்கனை மரணத்தில் பகீர் தகவல்!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்-உஷாராணி தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் பிரியா (17) என்ற மகள் உள்ளனர்.

இவர்களில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு துறையில் படித்து வந்தார். பிரியா மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை. 6-ம் வகுப்பிலேயே பயிற்சி எடுத்து வந்த பிரியா மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாடி வந்தார்.

கடந்த மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரியாவுக்கு வலது காலில் தசை பிடிப்பு போல் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த பிரியாவை பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.

அறுவை சிகிச்சை முடிந்து காலில் கட்டு போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகும் வலி குறையாததால் 2 நாட்களுக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள்.

அங்கு காலில் போடப்பட்டிருந்த கட்டுக்களை பிரித்து பார்த்த டாக்டர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டமும் தடைபட்டு தொற்றுக்கள் உருவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காலை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது. காலை துண்டித்தால் மட்டுமே தொற்றுக்கள் மேற்கொண்டு பரவாது என்று முடிவு செய்தனர். அதன்படி கால் மூட்டின் மேல் பகுதியில் இருந்து கால் துண்டித்து அகற்றப்பட்டது.

அதை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலையில் பிரியா பரிதாபமாக இறந்தார்.

அவர் இறந்ததை அறிந்ததும் பெற்றோர்களும், சகோதரர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.

தலைமையில் 21-ந்தேதி நடக்கிறது குறிப்பிட்ட ஆபரேசனை செய்ததும் கட்டு போட்டிருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் கவனக்குறைவால் மிகவும் இறுக்கமாக கட்டு போட்டுள்ளார்கள். இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது.

இதனால் கால் அழுகி தொற்று உருவாகி இருக்கிறது. இதுவே பிரியாவின் உயிரை பறித்து இருக்கிறது. மாணவி பிரியாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்த்து கண்கலங்கினார். பின்னர் பெற்றோருக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

ஏற்கனவே மாணவி பிரியாவை நேரில் பார்த்து தைரியம் சொல்லி பேட்டரியால் இயங்கும் செயற்கை காலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில் பிரியாவின் இழப்பு மிகப்பெரிய துயரத்தை தருவதாக அவர் கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!