அழைப்பிதழ் கொடுத்து நாய்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடத்திய தம்பதிகள்!

அரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தம்பதியினர் தாங்கள் வளர்த்த செல்ல பிராணியான பெண் நாய்க்கும் மற்றொரு ஆண் நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்திய முறைப்படி நடந்த இந்த விழாவில் இந்து மத சடங்குகள் செய்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழா தொடர்பாக பெண் நாயின் உரிமையாளர் சவிதா கூறியதாவது:- எங்களுக்கு குழந்தை இல்லை.

எனது கணவர் கோவிலுக்கு சென்று அங்குள்ள கால்நடைகளுக்கு உணவளித்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தெருநாய் ஒன்று அவரை பின் தொடர்ந்து எங்கள் வீட்டுக்கு வந்தது. அந்த பெண் நாய்க்கு ஸ்வீட்டி என்று பெயரிட்டு வளர்த்து வந்தோம். எங்களுக்கு குழந்தை இல்லாததால் அதை குழந்தை போல வளர்த்தோம்.

மேலும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து அந்த நாய்க்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தோம். அப்போது மனிட்டா என்பவர் வளர்த்து வந்த ஆண் நாயான ஷேருவுக்கும், ஸ்வீட்டிக்கும் திருமணம் செய்து முடித்தோம்.

மேலும் திருமண பத்திரிகைகள் அச்சடித்து அக்கம்பக்கத்தில் வசிக்கும் 100 பேருக்கு அழைப்பிதழை வழங்கினோம். அதைப் பார்த்ததும் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் அவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

இந்து சம்பிரதாய முறைப்படி அனைத்து சடங்குகளையும் செய்து 2 நாய்களுக்கும் இன்று திருமணம் நடத்தினோம். குழந்தை இல்லாத எங்களுக்கு இந்த திருமணம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. நாய்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் போலீசார் எங்களை பிடித்து சிறையில் அடைப்பார்கள் என்று பலர் கூறுகிறார்கள்.

ஆனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஆண் நாய் ஷேருவின் உரிமையாளர் மனிட்டா கூறுகையில், “நாய்களுக்கு திருமணம் செய்து அழகு பார்க்கும் இந்த யோசனை மிகவும் வேடிக்கையாக நடந்த ஒரு நிகழ்ச்சியாகும்” என்றார். இந்த நாய்களின் திருமண விழா தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!