150 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணித்து திருமணம் செய்த கோவை வாலிபர்!

கேரளாவுக்கு 150 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்த வாலிபர் திருமணம் செய்து மீண்டும் அதே சைக்கிளில் மணமகனாக கோவை திரும்பியுள்ளார்.

குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக பணியாற்றி வருபவர் சிவசூர்யா (வயது 28). சுற்றுச்சூழல் ஆர்வலர். இதேபோன்று, குஜராத்தின் ஆமதாபாத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருபவர் அஞ்சனா.

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சத்யன் என்பவரின் மகள் ஆவார். இவர்கள் இருவர் இடையே, 2 ஆண்டுகளாக நட்பு ரீதியிலான பழக்கம் இருந்துள்ளது. இந்த நட்பு திருமணத்தில் முடிந்துள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்க நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவரான சிவசூர்யா உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை இந்தியா உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவர்கள் இருவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு, குருவாயூர் கோவிலில் திருமணம் செய்வது என்று முடிவாகி அதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

திருமணத்திற்கு தயாரான சிவசூர்யா கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று, அஞ்சனாவை கரம்பிடிக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, தனது 5 நண்பர்களுடன் அவர் சைக்கிளில் புறப்பட்டார்.

திருமணத்திற்கான பயணம் – கோயம்புத்தூரில் இருந்து குருவாயூர் என்ற வாசகம் அடங்கிய பதாகையை சுமந்தபடி அவர்கள் சென்றனர். இதன்பின்னர், சிவசூர்யா மற்றும் அஞ்சனாவின் திருமணம் கோலாகலமுடன் நேற்று நடந்து முடிந்தது.

உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின்பு, சிவசூர்யா மீண்டும் தனது சைக்கிளில் கோவை நோக்கி புறப்பட்டார். அவரை மணமகள் வீட்டார் காரில் பின் தொடர்ந்தனர். இதனை முன்பே, மணமகள் குடும்பத்தினரிடம் சிவசூர்யா எடுத்து கூறி அதற்கு சம்மதமும் வாங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!