விஷம் கொடுத்து கொன்ற வழக்கு- தடயங்களை அழித்த தாயார், மாமாவிடம் கிடுக்கி பிடி விசாரணை!

கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது 23). கல்லூரி மாணவர். இவருக்கும் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது.

கிரீஷ்மா தனியார் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். ஷாரோன் ராஜ்-கிரீஷ்மா இருவரும் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள்.

இதனால் கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை பேசி முடிவு செய்தனர்.

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய கிரீஷ்மாவும் ஒப்புக்கொண்டார். இதனை காதலன் ஷாரோன் ராஜிடம் கூறியபோது அவர் அதனை ஏற்க மறுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனால் மனம் உடைந்த கிரீஷ்மா, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஷாரோன் ராஜை வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு குளிர்பானம் மற்றும் கஷாயம் கொடுத்தார். அதனை குடித்த ஷாரோன் ராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக ஷாரோன் ராஜ் பெற்றோர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஷாரோன் ராஜ் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர். முதலில் காதலனுக்கு விஷம் கொடுக்கவில்லை என மறுத்த கிரீஷ்மா, பின்னர் போலீசார் அதற்கான ஆதாரங்களை காட்டிய போது ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் போலீஸ் நிலைய கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கும் முயன்றார். இதற்கிடையே கிரீஷ்மா, அவரது காதலனை கொலை செய்ய அவரது தாயார் சிந்து மற்றும் மாமா நிர்மல் குமார் ஆகியோரும் உதவி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் ஷாரோன் ராஜூக்கு கொடுத்த விஷ பாட்டிலை வீட்டின் அருகில் உள்ள குளக்கரையில் வீசியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கிரீஷ்மாவின் தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சை, நீல நிற ஆசிட் பாட்டில்கள், குளக்கரையில் வீசப்பட்ட விஷ பாட்டில்கள் ஆகியவற்றை மீட்டனர். தடயங்கள் அனைத்தையும் கைப்பற்றிய பின்பு இருவரையும் மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கி பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த வழக்கை குமரி மாவட்ட போலீசார் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கொலையுண்ட ஷாரோன் ராஜின் வீடு கேரள பகுதியில் உள்ளது. காதலனை கொலை செய்ததாக கைதான கிரீஷ்மாவின் வீடு குமரி மாவட்ட எல்லையான பளுகல் பகுதியில் அமைந்துள்ளது.

இதனால் வழக்கு விசாரணைக்கும், தடயங்களை சேகரிக்கவும், ஆதாரங்களை திரட்டவும் கேரள போலீசார் குமரி மாவட்டத்திற்கு வரவேண்டியதாக உள்ளது. இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இந்த வழக்கை குமரி மாவட்டத்திற்கு மாற்றலாமா? என்று கேரள போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!