‘ஸ்மார்ட்போன்’ வாங்க ஆசைப்பட்டு ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி!

பள்ளி மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் ஸ்மார்ட் போன் வாங்க ஆசைப்பட்டு சிறுமி ஒருவர் தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

அம்மாநிலத்தில் தாபான் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை பஸ் ஏறி 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலூர் காட் மாவட்ட மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தம்பியின் மருத்துவசெலவுக்கு பணம் தேவைப்படுவதால் தனது ரத்தத்தை விற்க வந்ததாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இதுகுறித்து சைல்டுலைனுக்கு போன் செய்தனர்.

அவர்கள் வந்து சிறுமியிடம் விசாரித்த போது அவர் ஆன்லைனில் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்ததும், அதை வாங்குவதற்கு பணம் தேவைப்படுதால் ரத்தத்தை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், நான் பக்கத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் பார்க்கிறேன். எனது மனைவி வீட்டை பார்த்துக் கொள்கிறார்.

எனது மகள் வெளியே சென்ற போது நான் வீட்டில் இல்லை. ரத்தம் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்ற விஷயம் அவளுக்கு எப்படி தெரிந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!