வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ் (13) அபினேஷ் (6) என்ற இரு மகன்களும் ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.

அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வந்த அபினேஷ் அருகில் விளையாட சென்றுள்ளார். இரவு 8 மணி ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர்.

அப்போது அருகில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு சென்று தேடி பார்த்த போது அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனை பரிசோதனை செய்து டாக்டர் சிறுவன் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. சிறுவனின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டது.

மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை பார்த்த பொழுது சிறுவன் மாலை சுமார் 5 மணியளவில் கட்டிடம் கட்ட அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட குழியில் ஒவ்வொரு குழியாக இறங்கி ஏறி விளையாடிக் கொண்டிருப்பதும் இறுதியாக 7அடி ஆழமுள்ள குழி அருகே அமர்ந்து கொண்டிருப்பதும் அதில் தவறி விழுந்ததும் தெரிய வந்தது. அந்தக் குழியில் 4 அடி ஆழம் தண்ணீர் உள்ளதால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் இறந்ததும் தெரிய வந்தது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!