95 வயது மூதாட்டி மரணம் – சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பத்தினர்கள்!

கேரளாவில் ஒரு குடும்பமே, இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய் புகைப்படம் எடுத்தது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாவு வீட்டில் யாரையாவது சிரித்த முகத்தில் பார்க்க முடியுமா? ஆனால் கேரளாவில் ஒரு குடும்பமே, இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய் புகைப்படம் எடுத்தது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்தது பனவெலில் குடும்பம். அந்த குடும்பத்தின் 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துபோனார். இவரது கணவரான கிறிஸ்தவ மதபோதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார்.

இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள். அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் 4 தலைமுறைகளைச் சேர்ந்த அவர்களில் பலர், மூதாட்டியின் இறுதிமூச்சின்போது அருகில் இருக்க வந்துவிட்டார்கள்.

மூதாட்டி இறந்ததும் மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தவர்கள், அதற்கு முன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்தோடு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்.

அந்த படம் சமூக வலைதளத்தில் பரவியதும்தான் சர்ச்சை பற்றிக்கொண்டது. ‘இது என்னப்பா… எழவு வீடா, பார்ட்டி கொண்டாட்டமா? இப்படியா சிரிச்சிக்கிட்டு போஸ் கொடுப்பாங்க?’ என்று சிலர் சிடுசிடுக்க, வேறு சிலரோ, ‘துக்க வீடு என்றாலே இறுக்கமான முகத்துடன்தான் இருக்க வேண்டுமா? இப்படி கலகலப்பாகவும் இருக்கலாமே?’ என்று ஆதரவுக்கொடி பிடிக்கிறார்கள்.

மூதாட்டியின் மூத்த மகனான அருட்தந்தை ஜார்ஜ் உம்மனோ கூறும்போது, ‘மற்றவர்களின் கருத்து பற்றி எங்களுக்கு கவலையில்லை. நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள் தாயின் மரணத்தின்போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினோம்.

பின்னர், அவருடனான சிரிப்பும், நெகிழ்வுமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டோம். அப்போது எடுத்த ஒரு படம்தான் இது. 10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்தபோதும் இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடை கொடுத்தோம்’ என்கிறார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!