வீட்டை விற்க முயற்சி… அடித்தது ஜாக்பாட்-ஆச்சரியத்தில் மிதந்த நபர்!

கேரளத்தில் குடும்ப கஷ்டத்தில் வீட்டை விற்க இருந்தவருக்கு, விற்பனைத் தொகையை வாங்குவதற்கு முன்பு கேரள லாட்டரில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளத்தின் மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பாவா(50). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தவர் அண்மைக்காலமாக அதில் நஷ்டம் அடைந்துள்ளார். இதனிடையே தன் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்ததிலும் கடனில் சிக்கினார்.

வங்கி, உறவினர்களிடம் இருந்து கடன் வாங்கிய முகமது பாவா 50 லட்சம் ரூபாய் கடனில் இருந்தார். இந்த கடனை அடைப்பதற்காக மஞ்சேஸ்வரத்தில் உள்ள தன் வீட்டை விற்க முடிவு செய்து, ஒருவரிடம் விலை பேசினார்.

வீட்டை விலை பேசியவர்கள் மாலையில் முன்பணம் கொடுக்க வருவதாகச் சொன்னார்கள். இந்நிலையில் அன்று மதியமே முகமது பாவா முன்பு வாங்கியிருந்த லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது. வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் வழக்கம் இல்லாத முகமது பாவா, அன்று அந்த வழியாக வந்த லாட்டரி சீட்டு விற்பவரின் நிர்பந்தத்தால் வாங்கியுள்ளார்.

இதில் ஒரு கோடி ரூபாய் பரிசும் விழ, விற்க ஆயுத்தமான தன் வீட்டை விற்காமல் தன் கடனை அடைத்துவிட்டார் முகமது பாவா. மீதம் இருக்கும் தொகையில் எளிய மக்களுக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முகமது பாவாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்து, வீடு விற்பனையும் ரத்தாகி இருக்கும் சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.-News & image Credit: kamadenu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!