விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை… ஊழியர் அதிர்ச்சி!

துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.

விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார். இதை அடுத்து விமான நிறுவனம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி புறப்பட்ட விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்போது அந்த விமான ஊழியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் சேர்ந்து பாம்பின் தலை உணவில் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை வீடியோவாக எடுத்து அவர் டுவிட்டரில் பதிவிட்டார்.

சன் எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனம் இந்த தகவலை அறிந்ததும் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டு உள்ளது. இத்தகைய செயல்பாடுகளை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த விமான நிறுவனத்துக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.

மறுமுனையில் உணவு வழங்கும் நிறுவனம் தங்கள் நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருப்பதை மறுத்துள்ளது. எங்கள் நிறுவனத்தில் சமைக்கப்படும் உணவுகள் 280 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கப்படுகின்றன.

இந்த பாம்பின் தலை பாதி வெந்த நிலையில் இருப்பதன் மூலம், சமைத்த பின் வேறு யாரோ இதை வேண்டுமென்றே சேர்த்து இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

விமான சேவையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். எங்கள் விமானத்தின் விருந்தினர்களுக்கு உயர்ந்த வசதிகளை செய்து தருவது எங்கள் நோக்கம்.

அவர்கள் வசதியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு நடைபெற்று வருகிறது என்று விமான நிறுவனம் தெரிவித்தது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!