கல்யாணத்திற்கு முன்பும், பின்பும் கணவனும்-மனைவியும் பேசக்கூடாத விஷயங்கள்!

ஆணும் – பெண்ணும் கணவன், மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பின்பு அவர்களுக்குள் ரகசியங்கள் இருக்கலாமா? என்ற கேள்விக்கு இன்றைய மனோதத்துவ நிபுணர்கள் தரும் விடை வித்தியாசமானதாக இருக்கிறது.

‘ரகசியங்கள் இருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். அதை அப்படியே ரகசியமாகவே வைத்திருப்பதுதான் நல்லது. கணவனும், மனைவியும் முந்தைய ரகசியங்களை பாதுகாக்கும் வரைதான் வாழ்க்கை இனிக்கும்’ என்று சொல்கிறார்கள்.

ஒளிவு மறைவற்ற வெளிப்படையான பேச்சு பலரது வாழ்க்கையில் புயலை கிளப்பி இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய விஷயங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது வீண் குழப்பங்களை வளர்த்து விவாகரத்து வரை கொண்டுபோய்விட்டுவிடும் என்று கூறும் அவர்கள், திருமணத்திற்கு முன்பும், பின்பும் கணவனும்-மனைவியும் பேசக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று பெரிய பட்டியலே போட்டுக்காட்டுகிறார்கள்.

திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்டதாக அமைத்துக்கொள்ளவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கான முதல்படியாக கணவருடன் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஒளிவுமறைவற்ற தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அது நல்லதுதான்.

திருமணத்திற்கு பின்பு ரகசியங்கள் தேவையில்லை. ஆனால் திருமணத்திற்கு முந்தைய ரகசியங்களை முன்பின் யோசிக்காமல் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை. திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு முந்தைய விஷயங்கள் எல்லாவற்றையும் ரகசியம் காக்காமல் கூறிவிட நினைப்பது பலரின் இயல்பு. தப்புத் தண்டா எதுவும் செய்யவில்லையே என்ற மனப்பாங்குடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாராகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு நெருடலான தொடர்புகள் இருந்தால்தான் பிரச்சினை உருவாகும் என்பதில்லை. மனைவி கூறும் சாதாரண விஷயங்கள்கூட கணவரின் மனதில் சந்தேகத்தையும், தவறான எண்ணத்தையும் வளர வைத்துவிடலாம்.

திருமணத்திற்கு முன் நடந்த சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதால், அதுவே விபரீதமாக மாறிய நிகழ்வுகள் அனேகம். பல திருமண பந்தங்களை அது சிதறடித்திருக்கிறது. சமீபகாலமாக நடக்கும் பல விவாகரத்துகளுக்கு கடந்தகால வாழ்க்கை காரணமாக கூறப்பட்டுள்ளது.

கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் அதிகரிப்பதால், அதற்கான கவுன்சலிங் பெற வருபவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆண்களில் பலர் ‘என் மனைவி நல்லவள் இல்லை. அதனால் நான் அவளை விட்டு விலக விரும்புகிறேன்’ என்று கூறுகிறார்கள்.

‘திருமண உறவில் அடியெடுத்துவைத்த பின்பு, மனைவி அந்த பந்தத்தை மதித்து நடந்துகொண்டால் போதும். திருமணத்திற்கு முந்தைய நிலை பற்றி அறிய தனக்கு ஆர்வம் இல்லை’ என்று மனப்பூர்வமாக சொல்லும் ஆண்களின் எண்ணிக்கை குறைவுதான். அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட ஆண்கள் உருவாகும் வரை பெண்கள் முந்தைய ரகசியங்களை காப்பதுதான் நல்லது.

பெரும்பாலும் கணவனின் கடந்தகாலத்தைப் பற்றி மனைவி பெரிதாக சிந்திப்பதில்லை. ஆனால் மனைவியின் கடந்தகாலமோ கணவனுக்கு அவ்வப்போது வம்புக்கு இழுக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. பெண்களில் பலர் ‘எனது கடந்த காலத்தை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்ட பின்பு கணவர், அந்த கசப்பான விஷயங்களை சொல்லிக்காட்டி என்னை துன்புறுத்துகிறார்’ என்று கண்ணீரோடு சொல்கிறார்கள்.

அதில் பெண்களின் தவறும் சரிபாதி இருக்கத்தான் செய்கிறது. வாழ்க்கை என்பது நல்ல விஷயங்கள் மட்டும் நடக்கும் களம் அல்ல. நன்மை-தீமை இரண்டும் விளையக்கூடிய பூமி. இதில் சில களைகள் நாம் விதைக்காமலே முளைக்கக்கூடும்.

அவைகளை பிடுங்கி எறிய கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சியை வளர்க்க முடியும். கடந்த காலம் என்பது இனிமையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது முடிந்துபோன ஒன்றுதான். ஆனால் நிகழ்காலம் என்பது மிக முக்கியமானது. அதை மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

பழைய விஷயங்களை பேசுவதில் மறுமணம் செய்து கொண்டவர்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மறுமண வாழ்க்கையில் பரந்த மனம் இருக்க வேண்டும். கடந்தகால நெருடல்கள் இருக்கக்கூடாது. அதுபற்றி தம்பதிகள் அவசியமின்றி பகிர்ந்து கொள்ளக்கூடாது. இனி இதுதான் வாழ்க்கை என்று தீர்மானித்த பிறகு பழையதை தோண்டக்கூடாது. புது வாழ்வை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். இதில் பல ரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், கசப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்கவைகளை மனதிற்குள் புதைத்துக்கொள்வது நல்லது.

வீண் பிரச்சினைகளை உருவாக்கும் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்போது கடந்தகால நினைவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். அதுதான் சரியான முடிவு. கடந்து போனதைக்கூறி கையில் இருப்பதை சிதறவிடுவது அறிவார்ந்த செயல் அல்ல.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!