‘நிலை மறந்தவன்’ திரைவிமர்சனம்!

நடிகர்: பகத் பாசில், கவுதம் மேனன்

நடிகை: நஸ்ரியா

டைரக்ஷன்: அன்வர் ரஷீத்

இசை: ஜாக்சன் விஜயன், சுஷின்ஷியாம்

ஒளிப்பதிவு : அமல்நீரத்

டிரான்ஸ் என்கிற மலையாள படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ள படம் தான் நிலை மறந்தவன். மதத்தின் பெயரால் ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றி படம். மலையாளத்தில் வெளியான ‘டிரான்ஸ்’ படத்தின் தமிழாக்கமாக வந்துள்ளது.

கன்னியாகுமரியில் வறுமையில் இருக்கும் பகத் பாசில், தன்னம்பிக்கை அளிக்கும் உரைகள் நிகழ்த்தி வாழ்க்கையை ஓட்டுகிறார். சிறுவயதிலேயே தாயை இழக்கிறார்.

ஒரு கட்டத்தில் மனநோயாளியான தம்பியும் தற்கொலை செய்து கொள்ள, நொறுங்குகிறார். துக்கத்தில் இருந்து மீள முடியாத வலியோடு மும்பை செல்கிறார். அங்கு போலி மதபோதகர்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கவுதம் மேனன் அறிமுகம் கிடைக்கிறது. பகத் பாசிலுக்கும் பயிற்சி அளித்து மதபோதகராக இறக்கி விடுகிறார்.

நோயாளிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் பகத் பாசில் குணப்படுத்துவதாக மக்களை நம்ப வைத்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். பகத் பாசிலுக்கு பணமும் புகழும் குவிகிறது. ஒரு கட்டத்தில் தவறை உணர்கிறார்.

மோசடி கும்பல் பிடியில் இருந்து மீண்டாரா? என்பது கிளைமாக்ஸ். பகத் பாசில் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். இளைஞர்களுக்கு ஊக்க பயிற்சி, ஓட்டலில் வேலை, என்றெல்லாம் சாதாரண இளைஞராக வரும் அவர் மத போதகராக மாறிய பிறகு தீர்க்கமான பார்வை, மயக்கும் பேச்சு என்று இன்னொரு முகம் காட்டுகிறார். அவரது பிரசங்க மேனரிஷம் கைதட்ட வைக்கிறது.

குழந்தை இறப்புக்கு காரணமான குற்ற உணர்வில் பெற்றோரிடம் அழுது மன்னிப்பு கேட்டு உருக வைக்கிறார். நஸ்ரியா காதலில் ஏமாந்து போதை அடிமையாக வருகிறார். பகத் பாசிலும் நஸ்ரியாவும் வெளிநாட்டில் சந்திக்கும் காட்சியில் ஜீவன். கவுதம் மேனன், செம்பொன் வினோத் ஜோஸ் கார்பரேட் வில்லன்களாக மிரட்டுகிறார்கள். விநாயகன் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவு.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. மதத்தின் பெயரால் கார்பரேட் கும்பல் நடத்தும் தில்லு முல்லுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் அன்வர் ரஷீத். ஜாக்சன் விஜயன்,

சுஷின் ஷியாம் இசையும், அமல்நீரத் ஒளிப்பதிவும் காட்சிகளோடு ஒன்ற வைக்கின்றன.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!