தைவான் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: 2 பேர் பலி – 100க்கு மேற்பட்டோர் காயம்..!


தைவான் நாட்டில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் ஹுவாலியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 114 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


தகவலறிந்து பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாலைகளில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டில் தைவான் தீவில் 7.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2,400 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி