சபரிமலைக்கு சென்று அதிர வைத்த பெண் சமூக ஆர்வலர் மறுமணம்!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த கோர்ட்டு அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என அறிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கேரள அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமாக நடந்தபோது கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்க்கா, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர்.

அங்கு சாமி தரிசனமும் செய்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கனகதுர்க்காவின் கணவர் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். சபரிமலைக்கு சென்று வந்த பின்னர் வீட்டுக்கு சென்ற கனகதுர்க்காவை அவரது உறவினர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

கணவரும் அவரை வேண்டாம் என உதறி தள்ளினார். இதனால் பரிதவித்த கனகதுர்க்கா தனக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு அவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதன்படி கணவர் வீட்டுக்கு கனகதுர்க்கா சென்றபோது அங்கு அவரது உறவினர்கள் யாரும் இல்லை. அவர்கள் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு சென்று விட்டனர்.

கணவர் கைவிட்டதால் கனகதுர்க்கா, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு கனகதுர்க்காவுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து தனியாக இருந்த கனகதுர்க்காவுக்கு மலப்புரத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சிவன்குட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பொது பிரச்சினைகளில் ஒன்றாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பழகி வந்ததால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் நேற்று மலப்புரத்தில் நடந்தது. இதில் சிவன் குட்டியின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!