எந்த முறையில் விநாயகரை வழிபட்டால் பிரச்சனைகள் தீரும்.!

வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும். நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்தியம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம். கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம்.

அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம். வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!