ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்- 1,000 பேர் பலியான சோகம்!

ஆப்கானிஸ்தான் நாட்டை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. இதில் 1,000 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அடக்குமுறை ஆட்சி, பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை என எண்ணற்ற சிக்கல்களை அந்த நாட்டு மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டது. அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள கோஸ்ட் மற்றும் பக்டிகா மாகாணங்களை இந்த நிலநடுக்கம் தாக்கியது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானதாகவும், கோஸ்ட் மாகாணத்தின் தலைநகர் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிதத்து. இந்த பயங்கர நிலநடுக்கம் பக்டியா மற்றும் கோஸ்ட் மாகாணங்களை கடுமையாக உலுக்கியது. குறிப்பாக பக்டியா மாகாணத்தை இந்த நிலநடுக்கம் உருக்குலைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பான்மையான கட்டிடங்கள் மோசமாக கட்டப்பட்டவையாக உள்ளன. இதனால் அவை சிறிய நிலநடுக்கம் மற்றும் சிறிய நிலச்சரிவை கூட தாங்க முடியாதவையாக உள்ளன. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் பயங்கரமாக ஏற்பட்ட நேற்றயை நிலநடுக்கத்தில் பக்டியா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகின.

இது குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரில் பக்டியா மாகாணத்துக்கு விரைந்தனர். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் அனைத்தும் வெளியேறிவிட்டதால் உள்ளூர் மீட்பு குழுக்கள் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபட்டன. இதனால் மீட்பு பணிகள் சிக்கலானதாகவும், கடினமானதாகவும் அமைந்தது.

இடிபாடுகளை தோண்டதோண்ட கொத்து, கொத்தாக பிணங்கள் மீட்கபட்டன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1,500-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில் இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் விரைவு

இது குறித்து தலீபான் அரசின் துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி கூறுகையில், “பக்டிகா மாகாணத்தின் 4 மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான நம் நாட்டு மக்கள் கொல்லப்பட்டனர்; படுகாயம் அடைந்தனர்; டஜன் கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. மேலும் பேரழிவைத் தடுக்க உடனடியாக குழுக்களை அனுப்புமாறு அனைத்து உதவி நிறுவனங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என கூறினார்.

நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் விரைவாக மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நபர்கள் ஹெலிகாப்டரில் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாகிஸ்தானிலும் நில அதிர்வு

ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி நிலநடுக்கத்தின் வீரியம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாலும், அது மக்கள் அடர்த்தி மிக்க பகுதிகளில் நிகழ்ந்துள்ளாதாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கவலை தெரிவித்தார். இதனிடையே ஆப்கானிஸ்தானை உலுக்கிய இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2002-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலியானதும், அதற்கு முன்னதாக 1998-ம் ஆண்டு வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததும் நினைவுகூரத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!