மாதவிலக்கு பற்றிய கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

மாதவிடாய் பற்றிய புரிதல் பெண்களிடையே கூட போதுமான அளவு இல்லாத நிலையே இன்றளவும் நிலவுகிறது. பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என பல பலதரப்பினரும் மாதவிடாய் பற்றி பொது வெளியில் பேசுவதற்கு தயங்கும் நிலையே நீடிக்கிறது. மாதவிடாய் பற்றி சமூகத்தில் பல்வேறு வகையான கட்டுக்கதைகளும் உலா வருகின்றன.

கட்டுக்கதை -1: மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் இருந்து அசுத்த ரத்தம் வெளியேறுகிறது. உண்மை: மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தம் அழுக்கானது, தூய்மையற்றது என்பது தவறான புரிதலாகும். மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பின் ஒரு அங்கம் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. உடல் முழுவதும் பரவி இருக்கும் அதே ரத்தம்தான் மாதவிடாயின்போதும் வெளியேறுகிறது. கருப்பையின் உள்ளே இருந்து ரத்தமும், திசுக்களும் வெளியேற்றப்படும். எனவே ரத்தம் வெளிர் சிவப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். ரத்தத்துடன் ஆக்சிஜன் எதிர்வினை புரிவதன் காரணமாக ரத்தத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

கட்டுக்கதை-2: மாதவிடாய் சுழற்சியில் காலதாமதம் நேர்ந்தால் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உண்மை: மாதவிடாய் தாமதமாவதை மட்டுமே கருத்தில் கொண்டு கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்ய முடியாது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், அதிக எடை, உடல்நல குறைபாடு, சமச்சீரற்ற உணவு பழக்கம், மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். அதன் காரணமாகவும் மாதவிடாய் சுழற்சி காலதாமதமாகலாம். அது கர்ப்பம்தானா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கட்டுக்கதை-3: மாத விடாய் காலத்தில் தலை முடியை கழுவக்கூடாது. உண்மை: மாதவிடாயின்போது தனிப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். முக்கியமாக உடல் சுத்தம் பேணுவது அவசிய மானது. மாதவிடாயின்போது தலைமுடியை கழுவவோ, குளிக்கவோ கூடாது என்று எந்த ஆய்வும் கூறவில்லை. உண்மையில் சுடு நீரில் குளிப்பது மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள், பிடிப்புகளை போக்க உதவும்.

கட்டுக்கதை-4: டம்பன் பயன்படுத்துவது கன்னித்தன்னையை பாதிக்கும். உண்மை: அதற்கும், கன்னித்தன்மைக்கும் சம்பந்தமில்லை. சைக்கிள் ஓட்டுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கன்னித்தன்மை பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு டம்பன் பயன்படுத்தும்போது அதற்கு இடமளிக்கும் வகையில் வளைந்து கொடுக்கும். மாதவிடாயுடன் தொடர்புடைய பெரும் பாலான கட்டுக்கதைகள் மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்டவை. அவை தவறானவை மட்டுமல்ல, பெண்கள் மத்தியில் பாலின பாகுபாடு, கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கங்களை கொண்டவை. அதற்குள் சிக்கிக்கொள்ளாமல் மாதவிடாய் சுழற்சி இயல்பாக நடை பெறுகிறதா? என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுக்கதை-5: மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. உண்மை: மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில் அந்த சமயத்தில் உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மனதுக்கு நல்லது. மாதவிடாயின்போது ஏற்படும் தசை பிடிப்புகள் காரணமாக உருவாகும் வலியைக் குறைக்கவும் உதவும். மாதவிடாயின் போது சில யோகாசனங்கள் மேற்கொள்வது நன்றாக உணர வைக்கும். நடைப்பயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்வதால் எந்த பாதிப்பும் நேராது. மாதவிடாய் காலத்தில் என்னென்ன உடற்பயிற்சிகளை பாதுகாப்பாக செய்யலாம் என்பது குறித்து உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!