சரக்கு ரெயில் பெட்டி மீது தூங்கிச் சென்ற வாலிபர்!

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற சரக்கு ரெயில் பெட்டி மீது தூங்கிச் சென்ற வாலிபர் வாணியம்பாடியில் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியதால் பரபரப்பு.

சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சரக்கு ரெயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர் வழியாக ஜோலார்பேட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது.அந்த சரக்கு ரெயில் பெட்டி மீது வாலிபர் ஒருவர் தூங்கியபடி பயணம் செய்துள்ளார்.

ஆம்பூரை கடந்து விண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் சிக்னல் காட்டுவதற்காக நின்ற ஸ்டேஷன் மாஸ்டர் இதனை கவனித்து வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.வாணியம்பாடியில் உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மின் இணைப்பை துண்டித்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கினர். ஆனால் அந்த நபர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை செய்ததில் சென்னையில் நின்ற சரக்கு ரெயில் மீது நேற்று முன்தினம் இரவு ஏறி படுத்து தூங்கியுள்ளார். ரெயில் எங்கும் நிற்காமல் வந்ததால் அவரால் இறங்க முடியவில்லை. வாணியம்பாடியில் ரெயில் நின்றதும் அவர் தப்பி ஓடியுள்ளார் என்பது தெரியவந்தது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!