கேகேவின் கையை பிடித்தபோது… இசையமைப்பாளர் நண்பர் கண்ணீர் பேட்டி!

கே.கே.வின் நீண்ட கால நண்பரான இசையமைப்பாளர் ஜீத் கங்குலி கூறியதை கேட்டு ரசிகர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.


கிருஷ்ணகுமார் குன்னத் இறந்துவிட்டதை இன்னும் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார் அவரின் நண்பர் ஜீத் கங்குலி.

கொல்கத்தாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் எனும் கேகேவுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். 53 வயதில் கேகே இறந்ததை யாராலும் நம்ப முடியவில்லை.

நண்பர்

கேகேவின் நீண்டகால நண்பரான இசையமைப்பாளர் ஜீத் கங்குலி கூறியதாவது, என் மனைவியுடன் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கேகே இறந்துவிட்டதாக ஒருவர் போன் செய்தார். உடனே கேகேவின் மேனஜருக்கு போன் செய்தேன். அவரோ தேம்பித் தேம்பி அழுதார். உடனே நான் மருத்துவமனைக்கு கிளம்பினேன் என்றார்.

மரணம்

நான் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அனைத்தும் முடிந்துவிட்டது. நிகழ்ச்சியில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும்போது ஏசியை அதிகம் வைக்குமாறு கார் டிரைவரிடம் கேட்டிருக்கிறார் கேகே. ஏசி ஃபுல் ஸ்பீடில் இருக்கிறது என்று டிரைவர் கூறியிருக்கிறார். ஆனால் ரொம்ப சூடாக இருப்பதாகவும், கை, கால் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்றார் ஜீத் கங்குலி.

தூக்கம்

மருத்துவமனையில் கேகேவின் கையை பிடித்தபோது அவர் தூங்கிக் கொண்டிருந்தது போல் தெரிந்தது. நிகழ்ச்சிக்கான உடையில் அவர் படுத்திருந்ததை பார்த்தபோது சிறிது நேரம் தூங்கிவிட்டு மீண்டும் வந்து பாடுவார் என்பது போன்று இருந்தது. ஆனால் வரவில்லை என்று கூறி வருத்தப்பட்டார் கங்குலி.

நல்ல மனிதர்

எனக்கு கேகேவை 24 ஆண்டுகளாக தெரியும். அவர் திறமையான பாடகர் மட்டும் அல்ல நல்ல மனிதரும் கூட. யாரை பற்றியும் தவறாக பேசியதே இல்லை. அவரிடம் இருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது. ஒத்திகை பார்க்காமல் ஸ்டுடியோவுக்கு வர மாட்டார். அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார் என கங்குலி மேலும் தெரிவித்தார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!