புதைக்கப்பட்ட குழந்தை… ஒரு மணிநேரத்திற்கு பின் வெளியே எடுத்த போது நடந்த அதிர்ச்சி!

காஷ்மீரில் உள்ளூர்வாசிகள் எதிர்ப்பால் புதைத்த குழந்தையை வெளியே எடுத்ததில் உயிருடன் இருந்த கொடூர பின்னணி தெரிய வந்துள்ளது.

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது பங்கூத் கிராமம். இதில் பஷாரத் அகமது குஜ்ஜார் மற்றும் ஷமீமா பேகம் தம்பதி வசித்து வருகிறது.

கர்ப்பிணியான பேகம் நேற்று காலை பிரசவித்துள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனினும், மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்து விட்டது என கூறியுள்ளது. 2 மணிநேரம் காத்திருந்து, பின் மருத்துவமனையில் இருந்து குழந்தையை எடுத்து கொண்டு ஹல்லான் கிராமத்திற்கு சென்று இறுதி சடங்குகளை செய்து குழந்தையை புதைத்துள்ளனர்.

எனினும், அந்த பகுதி உள்ளூர்வாசிகள் தங்களது இடத்தில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். குழந்தையை அதன் பூர்வீக பகுதியில் புதைக்கும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஒரு மணிநேரம் கழித்து, புதைத்திருந்த குழந்தையை குடும்பத்தினர் வெளியே எடுத்துள்ளனர். இதில், ஆச்சரியப்படும் வகையில் அந்த பெண் குழந்தை உயிருடன் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு ஓடி சென்றுள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக குடும்பத்தினரும் மற்றவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மருத்துவமனை பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 2 மணிநேரம் காத்திருந்தும் மருத்துவமனையின் அலட்சியத்தினால் உயிருடன் இருந்த குழந்தையை இறந்து விட்டது என தெரிவித்து அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தை புதைக்கப்பட்டு, பின்னர் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரு மணிநேரம் கழித்து புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தை உயிருடன் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு வேளை அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனில் குழந்தையின் கதி தெரியாமலேயே போயிருக்கும். கெட்டதிலும் ஒரு நல்லது என்ற வகையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!