மகனைப் போல பாசம் காட்டிய தம்பதி.. கார் டிரைவர் கிருஷ்ணா இப்படி மாறியது எப்படி?

மயிலாப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனு ராதாவும் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

ஸ்ரீகாந்தின் வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா, தனது நண்பர் ரவிராயுடன் சேர்ந்து திட்டம் போட்டு இருவரையும் கொன்று விட்டு வீட்டில் இருந்த 1000 பவுன் நகைகளை கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ஸ்ரீகாந்த், அனுராதா ஆகியோரின் உடல்கள் மாமல்லபுரம் அருகே உள்ள சூலேரிக்காடு பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டிருந்தது. 2 உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த போலீசார் நேற்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய கார் டிரைவர் கிருஷ்ணா கொலையாளியாக மாறியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கொலையாளி கிருஷ்ணாவின் குடும்பத்துக்கும், தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் குடும்பத்துக்கும் இடையே 20 ஆண்டு காலமாகவே நல்ல உறவு இருந்து வந்தது. கிருஷ்ணாவின் தந்தை பெயர் லால் சர்மா இவருக்கு இப்போது 75 வயதாகிறது. இவர் மாமல்லபுரம் சூலேரிக்காடு பகுதியில் உள்ள டால்பின்சிட்டி பொழுது போக்கு பூங்காவில் பணியாற்றி வந்தார். அப்போது பூங்கா திடீரென மூடப்பட்டதையடுத்து மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் லால் சர்மா தவித்தார்.

4 குழந்தைகளில் மூத்த மகன்தான் தற்போது கொலையாளியாக மாறி இருக்கும் கிருஷ்ணா. மற்ற 3 பேரில் இருவர் பெண் குழந்தைகள். இன்னொருவன் கிருஷ்ணாவின் தம்பி. வேலை போய் விட்ட நிலையில் வாழ்வதற்கு வழி தெரியாமல் தவித்த லால் சர்மா குடும்பத்துக்கு ஸ்ரீகாந்த் வழிகாட்டி உள்ளார்.

பண்ணை வீட்டுக்கு சென்று லால்சர்மா வேலை கேட்ட போது ஸ்ரீகாந்த் பாவம் பார்த்து வேலை கொடுத்துள்ளார். இதையடுத்து லால்சர்மா பண்ணை வீட்டிலேயே தங்கி இருந்து வீட்டை பார்த்துக் கொண்டார்.

அப்போதில் இருந்தே சிறுவனாக இருந்த டிரைவர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்தின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினான். லால் சர்மா தனது 2 மகள்களுக்கும் சென்னையில் வசிக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்கள் மாமல்லபுரம் அருகே உள்ள பேரூரில் வசித்து வருகிறார்கள்.

கிருஷ்ணாவுக்கு திருமணமாகி மனைவியும், 15 வயதில் மகனும் உள்ளனர். அவர்கள் நேபாளத்தில் வசித்து வருகிறார்கள்.

டிரைவர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்தின் குடும்பத்தினரோடு ஒட்டி உறவாடி வசதி வாய்ப்புடனேயே வாழ்ந்து வந்தான்.

ஸ்ரீகாந்த் குடும்பத்தினர், கிருஷ்ணாவை தங்களது மகன் போலவே பார்த்துக்கொண்டனர். அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மயிலாப்பூரில் உள்ள வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். ஸ்ரீகாந்தின் பங்களா வீட்டில் கிருஷ்ணாவுக்கு தனி அறையையும் ஒதுக்கி கொடுத்து இருந்தனர்.

ஸ்ரீகாந்தின் தந்தை ராஜகோபால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துள்ளார். அவர் டிரைவர் கிருஷ்ணாவிடம் அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருந்துள்ளார். ஸ்ரீகாந்தின் மயிலாப்பூர் வீட்டில் நிறைய பணம் உள்ளது. நகைகள் உள்ளது எனது காலத்துக்கு பிறகு நீ ஸ்ரீகாந்துடனேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது போன்று வீட்டில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் கிருஷ்ணாவிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

இப்படித்தான் சொத்து ஒன்றை விற்றது தொடர்பாக கிடைத்த ரூ. 40 கோடி பணம் பற்றியும் ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவிடம் கூறி உள்ளார்.

இப்படி ஸ்ரீகாந்தின் வீட்டில் உள்ள நகை மற்றும் பணம் கிருஷ்ணாவின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருக்கிறது. எத்தனை நாள்தான் டிரைவராகவே இருப்பது? என்று எண்ணிய கிருஷ்ணாவுக்கு எப்படியாவது வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்கிற எண்ணம் ஆழமாக ஏற்பட்டது.

அப்போதுதான் ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் கொன்று விட்டு வீட்டில் இருக்கும் நகை-பணத்தை மொத்தமாக சுருட்ட வேண்டும் என்கிற கொடூர எண்ணமும் கிருஷ்ணாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனது இந்த திட்டத்தை நிறைவேற்ற டார்ஜிலிங்கைச் சேர்ந்த நண்பர் ரவிராயை துணைக்கு அழைத்துள்ளார். இப்படி 3 மாதங்களுக்கு முன்பே கொலை சதி திட்டத்தை அரங்கேற்றிய கிருஷ்ணா, அதன் பின்னரும் நல்லவன் போலவே நடித்து பாசத்தை காட்டி வேஷம் போட்டுள்ளான்.

அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீகாந்தும், அனுராதாவும் சென்னைக்கு திரும்பும் நாளில் தீர்த்துக் கட்டும் எண்ணத்தோடு அந்த நாளுக்காக டிரைவர் கிருஷ்ணாவும், ரவிராயும் காத்திருந்தனர். இதன்படி கணவன்- மனைவி இருவரையும் கொன்று புதைத்துள்ளனர்.

எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்லக்கூடாது. யார் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. நாம் பலமுறை நண்பர்களோடும் உறவினர்களோடும் பேசி இருப்போம். இதனை 100 சதவீதம் உண்மையாக்கும் விதத்தில் மயிலாப்பூர் தம்பதியின் இரட்டை கொலை சம்பவம் அமைந்துள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!