இரவில் ரெயிலுக்கு காத்திருந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.!

ஆந்திராவில் கணவர், 3 குழந்தைகளுடன் இரவில் ரெயிலுக்கு காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி என்ற இடத்தில் ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு கணவன், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 குழந்தைகள் அந்த ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். பிரகாசம் மாவட்டத்தில் வசித்து வரும் அந்த குடும்பம் வேலை தேடி குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு செல்வதற்காக ரெயிலுக்கு காத்திருந்து உள்ளனர்.

எனினும், இரவு வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், நடைமேடையில் இருந்த அமரும் பலகையில் அவர்கள் படுத்து கொண்டனர். இந்த நிலையில், நள்ளிரவில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.

தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பிய அந்த கும்பல் கணவரை அடித்து, தாக்கியுள்ளது. இதனை அவரது கர்ப்பிணி மனைவி தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் கணவரை விட்டு விட்டு, ரெயில் நிலையித்தில் இருந்து தரதரவென கர்ப்பிணியை இழுத்து கொண்டு அருகேயிருந்த புதர் பகுதிக்கு சென்றனர்.

இந்த சம்பவத்தில் அவர்களிடம் இருந்து தப்பிய கணவர், ரெயில்வே போலீசாரின் உதவியை தேடி சென்றுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் உதவிக்கு என அதிகாரி ஒருவரையும் காணவில்லை.

இந்நிலையில், புதரில் கிடந்த அவரது மனைவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்காக, திஷா திட்டத்தின் கீழ் வழக்கை விரைவாக நடத்தி, விசாரணை மேற்கொண்டு, தீர்ப்பு வழங்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. திஷா செயலியும், திஷா ரோந்து வாகனங்களும் உள்ளன.

இந்த சூழலில், ரெயில் நிலையத்தில் இரவில் கணவர், 3 குழந்தைகளுடன் ரெயிலுக்கு காத்திருந்த கர்ப்பிணியை ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!