துணையிடம் சொல்லக்கூடாத விஷயங்கள்!

எதையும் மூடி மறைக்காமல் திறந்த புத்தகமாக இருந்தால் நன்மைகளை விட தீமைகள்தான் அதிகம் நேரும். தம்பதியர் பாதுகாக்க வேண்டிய தலையாய ரகசியங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன.


தம்பதியருக்குள் தாம்பத்ய வாழ்க்கையில் ஒளிவு, மறைவு இருக்கக்கூடாது, இருவரும் மனதால் ஒன்றுபட வேண்டும் என்று சொல்வார்கள். அதற்காக தங்கள் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் அப்படியே ஒப்புவிக்க வேண்டும் என்றில்லை. ஒருசில ரகசியங்கள் காக்கப்படுவதே நல்லது. எதையும் மூடி மறைக்காமல் திறந்த புத்தகமாக இருந்தால் நன்மைகளை விட தீமைகள்தான் அதிகம் நேரும். தம்பதியர் பாதுகாக்க வேண்டிய தலையாய ரகசியங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன.

காதல்

திருமண பந்தத்தின் மூலம் புதிதாக வாழ்க்கையில் இணைந்திருக்கும் கணவர் மீது அளவற்ற அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டிருக்கும் மனைவியர், தாம் எதையும் மறைக்கக்கூடாது, அவரும் தம்மிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக்கூடாது என்று கருதுகிறார்கள். அதனால் கடந்த கால காதல் பற்றி வெளிப்படையாக கணவரிடம் பேசலாமா? என்ற குழப்பம் எட்டிப்பார்க்கும். அதற்கு இடமே கொடுத்துவிடக்கூடாது.

ஏனெனில் துணையின் கடந்த கால வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்கு கணவர்மார்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். ரசித்து கேட்கவும் செய்வார்கள். ஆர்வ மிகுதியில் காதல் பற்றி பேசி விடக்கூடாது. அதை விரும்பி கேட்டால் கூட பின்னாளில் பிரச்சினை வரும்போது அது பற்றி பேசி மனதை நோகடிக்கச் செய்யக்கூடும். கணவரும் தனது காதல் கதைகளை விவரிக்க வேண்டியதில்லை. கடந்த கால காதல் விஷயங்கள் இருவருக்குமிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அது பற்றி பேசுவது கூடாது. பழைய காதல் நினைவுகளை அடிக்கடி நினைத்து பார்க்கவும் கூடாது.

நட்பு

தம்பதியர் இருவரும் தங்களுடன் படித்த, வேலை பார்த்த நண்பர்களை பற்றி பேசுவது தவறில்லை. ஆனால் அவர்களை பற்றிய ரகசியமான விஷயங்களை பகிர்ந்துவிடக்கூடாது. அது நட்பு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாழ்படுத்திவிடும். ‘இவரிடம் ரகசியம் எதுவும் பேசக்கூடாது போலிருக்கே. நாம் ஏதாவது ரகசியம் சொன் னால் கூட இதே மாதிரிதான் மற்றவர்களிடமும் சொல்லி விடுவார்’ என்ற எண்ணம் துணையிடம் எழுந்துவிடும். தம்பதியர் இருவரையும் பொறுத்தவரை அவர்களுடைய நண்பர் மூன்றாம் நபர்தான். அவரது ரகசியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பணம்

தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் எழுவதற்கு பண விவகாரங்கள்தான் காரணமாக இருக்கின்றன. இருவரும் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை அப்படியே ஒப்புவிக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஒரு வருடைய நிதி விவகாரத்தில் மற்றவர் தலையிடுவது தேவையற்ற பிரச்சினைகள் எழுவதற்கு வழிவகுத்துவிடும். இருவரும் அவரவர் விருப்பப்படி தனித்தனியாக செலவு செய்வதற்குரிய விஷயங்கள் இருக்கும். அந்த செலவுகளை பற்றி துணை அறியும்போது ‘இந்த செலவு தேவைதானா?’ என்று கேள்வி எழுப்பலாம். மனைவி தேவையில்லாமல் செலவு செய்கிறார் என்ற எண்ணம் கணவரிடம் எழலாம். குடும்பத்தில் நிதி பற்றாக்குறை நிலவும்போது தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதற்கு இருவரும் முன் வர வேண்டும். அதில் எந்த சமரசமும் செய்யக்கூடாது.

உறவு

ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் வெளியே கசியாமல் பாதுகாத்து வரும் ரகசியங்கள் சில இருக்கும். அதுபோல் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பற்றிய ரகசியங்களையும் துணையிடம் பட்டியலிட வேண்டியதில்லை. ஏனெனில் தம்பதியருக்கிடையே சச்சரவு எழும்போது, ‘நீ அப்படிப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் தானே. அதனால் அப்படித்தான் நடந்து கொள்வாய்’ என்பது போன்ற வார்த்தைகளை துணை பேசினால் குடும்ப நிம்மதி குலைந்துவிடும். ஓரிரு நாட்களில் சுமுக நிலைக்கு திரும்பக்கூடிய ஊடலும், நிரந்தர பிரிவுக்கு வழிவகுத்துவிடலாம். தனது உறவினர் ஒருவரின் நடத்தை, சுபாவம், பழக்கவழக்கம் பற்றி முன்கூட்டியே துணையிடம் கூறும்போது அவரை சந்திப்பதற்கு முன்பே அவரை பற்றி முடிவெடுத்துவிடுவார். அவரிடம் பேசும் தொனியும் மாறுபடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!