மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

வால்பாறையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த தாய்மூடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகன் ஹரிஹரன் (23).

இவர் வால்பாறையில் உள்ள நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஹரிஹரன் கடந்த 16-ந் தேதி தனது நண்பர்களுடன் இஞ்சிப்பாறை மைதானத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

பின்னர் போட்டி முடிந்ததும் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

வால்பாறை போட் அவுஸ் பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஹரிஹரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர்.

அதன்பேரில் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹரிஹரன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

இதை கேட்ட அவரது தாயார் பழனியம்மாள், தனது மகன் ஹரிஹரனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தார்.

இதையடுத்து அவரிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக எடுக்கும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மூளைச்சாவு அடைந்த இளைஞர், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிலருக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!