உருக்கமான கடிதம் எழுதி வைத்து பெண் டாக்டர் விபரீத முடிவு!

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரவசம் பார்க்கும்போது, சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த பெண் உயிரிழந்ததால் டாக்டர் மீது கொலை வழக்கு போடப்பட்டது.


ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் அர்ச்சனா சர்மா பிரசவம் பார்த்தார்.

அந்த பெண்ணிற்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் சிசிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். கர்ப்பிணி பெண் சாவுக்கு டாக்டரின் தவறான சிகிச்சையே காரணம் என அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். மேலும் அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள். டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசிலும் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் டாக்டர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர் மனவேதனை அடைந்தார். என் மீது வேண்டும் என்றே பழி சுமத்துகிறார்களே என தவித்தார்.

இந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரி மேல் மாடியில் இருந்த வீட்டில் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டாக்டர் அர்ச்சனா சர்மா உருக்கமான கடிதம் எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் என் கணவர் மற்றும் 2 குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பிறகு அவர்களை துன்புறுத்தாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் கொல்லவும் இல்லை. அப்பாவி டாக்டர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள். எனது மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம்.

இவ்வாறு அவர் உருக்கமாக எழுதி உள்ளார்.

பெண் டாக்டர் உயிரை மாய்த்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அம்மாநில முதல்- மந்திரி அசோக் கெலாட் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பாக போலீசார் நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் அசோக் கெலாட் கூறினார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறிஇருப்பதாவது:-

டாக்டர் அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

டாக்டர்கள் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுபவர்கள். ஒவ்வொரு மருத்துவருக்கும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற போராடுகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக நடக்கும் இது போன்ற சம்பவங்களுக்கு அவர்களை குறை சொல்வது நியாயம் அல்ல.

டாக்டர்கள் இப்படி அச்சுறுத்தப்பட்டால் அவர்கள் எப்படி நிம்மதியாக பணியாற்ற முடியும். கொரோனா மற்றும் பிற நோய்களின் போது தங்கள் உயிரை பணயம் வைத்து தங்கள் சேவைகளை வழங்கிய டாக்டர்கள் இது போன்ற சிசிச்சையை எவ்வாறு அளிக்க முடியும் என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். இது பற்றிதீவிர விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!