மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த பிளஸ்-1 மாணவர்.. திட்டிய ஆசிரியை – பின் நடந்த விபரீதம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளி ஆசிரியைகளிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளி. இவரது மகன் ரிதுன் (வயது 16), இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ரிதுன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அப்போது சக மாணவியிடம் பேசி கொண்டிருந்த அவர் அந்த மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த வகுப்பு ஆசிரியர் மாணவரை அழைத்து கடுமையாக திட்டியதுடன் அடித்து எச்சரித்தார். மேலும் மாணவரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார்.

பின்னர் வகுப்பறையை விட்டு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைத்து தண்டனையும் வழங்கி உள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவன் ரிதுன் கழிவறைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றார். அங்கிருந்து பள்ளி காம்பவுண்டு சுவரை தாண்டிய ரிதுன் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றார்.

அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த ரெயில் என்ஜினை பார்த்ததும் வேகமாக ஓடினார். மாணவர் ரிதுன் ஓடுவதை பார்த்த சக மாணவர்கள் கூச்சல் போட்டனர். அதற்குள் ரிதுன் ரெயில் என்ஜின் மீது பாய்ந்ததால் ரத்த வெள்ளத்தில் உடல் துண்டு , துண்டாக சிதறி அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகம் ரிதுனுக்கு உடல் நிலை சரியில்லை என்றும், உடனே பள்ளிக்கு வருமாறு கூறினர். பதறி அடித்த படி பெற்றோர் ஓடோடி வந்து பார்த்த போது மகன் ரெயில் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்ததை பார்த்து கதறினர்.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல உறவினர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இறந்து போன மாணவரின் உடலை எடுக்க விடாமல் மாணவரின் இறப்புக்கு காரணமான ஆசிரியரை கைது செய்ய வேண்டும், அதுவரை மாணவரின் உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் ஈரோடு ரெயில்வே டி.எஸ்.பி. ஹேமா மற்றும் தாசில்தார் தமிழரசி, டி.எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் ஏற்பட்ட காதல் கடித பிரச்சினையால் ஆசிரியர் கண்டித்ததால் ரிதுன் தற்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் பள்ளி அருகிலேயே மாணவர் தற்கொலை செய்த நிலையில் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

மேலும் மாணவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே மாணவர் உடலை பெற்று செல்வோம் எனவும் கூறிய உறவினர்கள் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த ஆதிதமிழர் பேரவை கட்சியினர் மாணவர் சாவுக்கு காரணமான ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

இதனால் இரவு 9.30 மணி வரை மாணவர் உடல் தண்டவாளத்திலேயே கிடந்தது. போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து இரவு 10 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு மாணவரின் உறவினர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து ரெயில்வே போலீசார் மாணவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடைய மாணவரை கண்டித்த ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகளிடம் கல்வித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் அந்த ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மாணவர் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதையொட்டி பள்ளி, ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டுள்ளதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!