மோசடி வழக்கில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியின் தம்பி அதிரடி கைது!

கோவையில் ரூ.97 லட்சம் நிலமோசடி வழக்கில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் தம்பியை போலிசார் கைது செய்தனர்.

கோவையில் ரூ.97 லட்சம் நிலமோசடி வழக்கில் கைதானவர் நடிகர் சுரேஷ் கோபியின் தம்பி என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பத்திரப்பதிவு

கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சுனில் கோபி (வயது55). இவர் கோவை நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பகுதியில் வசித்து வந்தார். இவர் நவக்கரை பகுதியில் பலருக்கு பாத்தியப்பட்ட நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து இருந்தார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டு விசாரணையில் அந்த நிலத்தின் பத்திரப்பதிவை கடந்த 2016-ம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு ரத்து செய்ததை யாரிடமும் கூறாமல், நிலத்தை பயன்படுத்தி வேறு நபருக்கு நிலத்தை விற்று பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.

ரூ.97 லட்சம் மோசடி

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். தொழில் அதிபரான இவரை அணுகி, நிலத்தை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி ரூ.97 லட்சத்தை சுனில் கோபி பெற்றுள்ளார். இந்நிலையில் கோர்ட்டு உத்தரவிட்டிருந்ததால் கிரிதரனுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.

இதனால் பணத்தை இழந்த கிரிதரன், கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து, கோழிக்கோடு பகுதியில் பதுங்கி இருந்த சுனில் கோபியை கைது செய்தனர்.

சுரேஷ் கோபியின் தம்பி

இவரிடம் விசாரணை நடத்தியதில் இவர் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி எம்.பி.யின் தம்பி என்பது தெரியவந்தது. நடிகர் சுரேஷ் கோபிக்கு சுபாஷ் கோபி, சுனில் கோபி, சனல் கோபி என்ற 3 சகோதரர்கள் உள்ளனர். இதில் சுனில் கோபியும், சனல் கோபியும் இரட்டையர்கள்.

சுனில் கோபி தனது அண்ணனும், எம்.பியுமான சுரேஷ் கோபிக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சுனில் கோபி, ரூ.97 லட்சம் மோசடி செய்ததுடன், கிரிதரனுக்கு சொந்தமான காரை போலி கையெழுத்து போட்டு தனது பெயருக்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது. அந்த காரையும் போலீசார் மீட்டனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக உறவினர்கள் ரீனா, சிவதாஸ் ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மோசடி வழக்கில், நடிகர் சுரேஷ் கோபியின் தம்பி கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!