ஜேம்ஸ் திரைவிமர்சனம்!

நடிகர் புனித் ராஜ்குமார்
நடிகை ப்ரியா ஆனந்த்
இயக்குனர் சேத்தன் குமார்
இசை சரண் ராஜ்
ஓளிப்பதிவு சாமி


பணத்தையும் அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் தனக்குள் வைத்திருக்கும் அண்டர் வேர்ல்டு டான்கள் சரத்குமார், ஶ்ரீகாந்த், ஆதித்ய மேனன், முகேஷ் ரிஷி ஆகியோர் அவரவர்களுக்குள் ஒரு எல்லை வகுத்துக்கொண்டு க்ரைம் சின்டிகேட்களை நடத்தி வருகிறார்கள்.

இவர்களுக்குள் பிரச்னை வர, இவர்கள் ஆட்களை அவர்கள் கொல்வது, அதற்கு அவர்கள் பழி வாங்குவது என பிரச்சனை வலுக்கிறது. இதனிடையில் அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கிறார் ஶ்ரீகாந்த்.

பழிவாங்கலை விட பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்த ஶ்ரீகாந்த், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை நடத்திவரும் புனித் ராஜ்குமாரை அழைக்கிறார். இறுதியில் தன் அப்பாவை கொன்றவர்களை ஶ்ரீகாந்த் பழி வாங்கினாரா? புனித் ராஜ்குமார், ஶ்ரீகாந்த்தை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் புனித் ராஜ்குமார், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே அவர் இறந்துவிட்டதால், சில காட்சிகளில் கிராஃபிக்ஸ் மூலமும், கேமரா மாயாஜாலங்கள் மூலமும் அவருக்கு உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

புனித்தின் அண்ணன் சிவராஜ்குமார் படத்தில் சிறப்புக் கெளரவ தோற்றத்தில் வந்து போகிறார். ஶ்ரீகாந்த்தின் தங்கையாக வரும் பிரியா ஆனந்த்துக்கும், புனித்திற்கும் காம்பினேஷன் காட்சிகள் இருந்தாலும் ரொமான்ஸ், டூயட் சாங் போன்ற விஷயங்கள் இல்லை என்பது ஆறுதல். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் சரத்குமார்.

கமர்சியல் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சேத்தன் குமார். சரண் ராஜின் இசையில் பாடல்கள் வேகத்தடை என்றாலும் அவரின் பின்னணி இசை, மாஸ் படங்களுக்கு ஏற்ற அதிரடி. சாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

படம் முடியும்போது, அவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியது முதல் அவருடைய எல்லா படங்களின் பெயர்கள், பாடிய பாடல்கள், தயாரித்த படங்கள், அவர் செய்த சமூகப் பணிகள், பெற்று விருதுகள் ஆகியவற்றைத் திரையிட்டு அஞ்சலி செலுத்தியிருக்கிறது படக்குழு.

மொத்தத்தில் ‘ஜேம்ஸ்’ சிறந்தவன்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி