புதின் ஒரு போர்க்குற்றவாளி – ஆவேசமாக பேசி கண்டித்த ஜோ பைடன்!

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில் “ புதின் ஒரு போர்க்குற்றவாளி “ என்று பகிரங்கமாக அறிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என பகிரங்கமாக அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் பைடன், ரஷிய அதிபர் புதினை இத்தகைய கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தாக்கி பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் பைடன் பேசியதாவது, “புதின் உக்ரைனில் பயங்கரமான பேரழிவையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளார். மகப்பேறு மருத்துவமனைகளையும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் குண்டுவீசி தாக்கி வருகிறார். இவை அனைத்தும் அட்டூழியங்கள் ஆகும்” என்று பைடன் வேதனைப்பட்டார்.

‘ரஷிய தாக்குதலுக்கு உள்ளான உக்ரேனிய குடிமக்களின் கொடூரமான நிலைமையை’ தொலைக்காட்சி காட்சிகளின் தொகுப்பு வாயிலாக அமெரிக்காவிற்கு காட்டப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பின் அதிபர் பைடன் புதினை கடுமையாக தாக்கி பேசினார்.

“அதிபர் பைடன் தனது ஆழ்மனத்திலிருந்து இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதிபர் பைடன் – ‘ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரியின் காட்டுமிராண்டித்தனமான செயல்களின்’ – படங்களை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு இதனை பேசினார்” என்று வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் ஷாகி குறிப்பிட்டார்.

மேலும், ரஷியாவின் நடவடிக்கைகளை ஆராய, அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கனவே சட்ட செயல்முறையை நடத்தி கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்ட வீடியோ உரையை நிகழ்த்தினார். அதில் உக்ரைனுக்கு உதவி தேவை என்று குறிப்பிட் டிருந்தார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, புதினை “கொலையாளி” என்று பைடன் ஒப்பிட்டு பேசியதையடுத்து, ரஷியா தனது அமெரிக்கவுக்கான தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!