கேரளாவில் போதைப்பொருளை வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்துவந்த கணவன் – மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் தம்பதி போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும், பெங்களூருவில் இருந்து கன்னூருக்கு சொகுசு பஸ்சில் கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் மூலம் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கன்னூர் மாவட்ட போலீசார் நேற்று சம்மந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கொரியர் நிறுவனத்திற்கு பார்சலில் வந்த போதைப்பொருளை வாங்க வந்த தம்பதியை கையும் களவுமாக பிடித்தனர்.
பிடிபட்ட முகபிலங்காடு பகுதியை சேர்ந்த அப்சல் மற்றும் அவரது மனைவி பல்கிஸ் இருவரும் போதைப்பொருள் விற்பனை செய்துவந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், தம்பதியிடமிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவில் ஒரே சமயத்தில் பிடிபட்ட அதிகபட்ட மதிப்புடைய போதைப்பொருள் இதுவாகும்.
தொடர்ந்து தம்பதியிடம் நடத்திய விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்துவந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அப்சல் மற்றும் பல்கிஸ் இருவரும் வாடிக்கையாளர்களிடமிருந்து வாட்ஸ் அப் மூலம் ஆர்டர்களை பெற்று விற்பனை செய்துவந்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியை சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!