குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி!

பங்குச் சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெப்பக்குளம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை பழைய குயவர்பாளையம் பச்சரிசிக்கார தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). இவரது மனைவி லாவண்யா (34). இவர்களுக்கு ரக்‌ஷிதா (15) என்ற மகளும், அர்ஜூன் (13) என்ற மகனும் உள்ளனர்.

ரக்‌ஷிதா 10-ம் வகுப்பும், அர்ஜூன் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நாகராஜன் பங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். மேலும் பங்குச்சந்தை குறித்து அனைத்து விவரங்களும் தெரிந்து வைத்திருந்தார்.

இதனால் பங்குச்சந்தை ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். பங்குச்சந்தையில் அடிக்கடி ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் நாகராஜன் செயல்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசதியாக வாழ்ந்து வந்தார்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக நாகராஜன் பலரிடம் லட்சக்கணக்கில் அதிக வட்டிக்கு கடனும் வாங்கி இருப்பதாக தெரிகிறது. இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் காரணமாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.

பங்குச்சந்தையை பொருத்தவரை சரிவுக்கு பிறகு உயர்வது வாடிக்கையான ஒன்று. ஆனால் உக்ரைன் போரால் சரிந்த பங்குச்சந்தை தொடர்ச்சியாக அதே நிலையில் நீடித்தது. இதனால் லட்சக்கணக்கில் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த நாகராஜனுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.

அதில் இருந்து மீண்டுவர முடியுமா? என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த படி இருந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை நாகராஜனின் மகள் மற்றும் மகன் பள்ளிக்கு சென்று விட்டனர். நாகராஜன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

மகள் மற்றும் மகனை தினமும் பள்ளிக்கு நாகராஜனே அழைத்து செல்வார். மாலையிலும் அவரே பள்ளிக்கு சென்று அழைத்து வருவார். ஆனால் நேற்று மாலை நாகராஜன் குழந்தைகளை அழைத்துவர பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவரது மகள் மற்றும் மகன் ஆகிய இருவரும் பள்ளிக்கு வெளியே காத்து நின்றனர்.

இதனை அந்த வழியாக சென்ற நாகராஜனின் மனைவி லாவண்யாவின் சகோதரி ஸ்ரீதேவி பார்த்தார். அவர் தெப்பக்குளம் காமராஜர் சாலை பகுதியில் வசித்து வருகிறார். நாகராஜன் வராததால் அவர்கள் 2 பேரையும் ஸ்ரீதேவி தனது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

பின்பு நாகராஜன் மற்றும் லாவண்யாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஸ்ரீதேவி தனது உறவினர்களுடன் நேற்று இரவு நாகராஜன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

பலமுறை அழைத்தும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக வீட்டின் அறைக்குள் பார்த்தனர். அப்போது அங்கு நாகராஜன் மற்றும் லாவண்யா ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நள்ளிரவில் போலீசார் அங்கு சென்றனர். வீட்டின்கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய கணவன்-மனைவி இருவரது உடலையும் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜனும், அவரது மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவரும் நேற்று பகலிலேயே தற்கொலை செய்திருக்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டதாலும், வீட்டிற்கு யாரும் வராததாலும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது உடனடியாக தெரியவில்லை.

பங்குச்சந்தையில் நஷ்டத்தை சந்தித்ததால் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டத்தை சந்தித்ததுதான் அவர்களது தற்கொலைக்கு காரணமா? அல்லது பிட்காயின் முதலீட்டில் ஈடுபட்டு நஷ்டத்தை சந்தித்தார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து துப்பு துலக்க நாகராஜனின் லேப்-டாப், செல்போன், பென்டிரைவ் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பங்குச் சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெப்பக்குளம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!