ஆப்பிரிக்காவில் பெண்ணொருவர் வளர்க்கும் அதிசய பன்றி பற்றி தெரியுமா?


தென் ஆப்பிரிக்காவில் பெண் பன்றி ஒன்று வரையும் ஓவியம் ரூ.2 லட்சம் வரை விலை போவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் விலங்குகள் உரிமை போராட்டக்காரர் ஜோன் லெஃப்சன்.

இவர் பிறந்து 4 வாரங்களே ஆன பெண் பன்றிக் குட்டியை, இறைச்சிக் கூடத்தில் இருந்து எடுத்து வந்து வளர்த்து வருகிறார். தற்போது 2 வயதாகும் அந்த பன்றிக்கு ‘Pigcasso’ என பெயர் வைத்தார்.

இதன் எடை 204 கிலோ ஆகும். இந்த பன்றி வரையும் ஓவியம் லட்சக்கணக்கில் விலை போகிறது. இது குறித்து ஜோன் லெஃப்சன் கூறுகையில், ‘Pigcasso எங்கள் மையத்துக்கு வந்தபோது மிகவும் சிறியவளாக இருந்தாள்.

இவள் விளையாடுவதற்கு ஏராளமான பொம்மைகளை வாங்கிக் கொடுத்தேன். அதில் வண்ணங்களும் தூரிகைகளும் இருந்தன. அவள், விளையாட்டுப் பொருட்களை விட்டு விட்டு, தூரிகை மற்றும் வண்ணங்களை எடுத்துக் கொண்டாள்.

அதன் பின், நான் ஒரு கேன்வாஸ் அட்டையை அவள் முன் வைத்தேன். அவள், வண்ணங்களில் தூரிகையை நனைத்து, கேன்வாஸில் வரைய ஆரம்பித்தாள்.


ஒரு பன்றியால் ஓவியம் தீட்ட முடியும் என்பது எனக்கு வியப்பைத் தந்தது. அதிலிருந்து, அவளுக்கு ஆர்வம் வரும் நேரத்தில் எல்லாம் வரைய ஆரம்பித்து விடுவாள்.

விலங்குகள் மீட்பு மையத்தில் அவளுக்காக ஓவியக்கூடம் ஒன்றை ஆரம்பித்தேன். ஓவிய ஆர்வலர்கள் இந்தப் படங்களைப் பார்த்து பிரமித்துவிட்டனர்.

இன்று ஒரு ஓவியத்துக்கு 2.3 லட்சம் வரை கொடுத்து, வாங்கிச் செல்கின்றனர். இதுவரை அவள் வரைந்த பெரும்பாலான ஓவியங்கள் விற்பனையாகிவிட்டன.

இவள் வரையப் போகும் ஓவியங்களை வாங்குவதற்கு காத்திருக்கிறார்கள். அவளாக விரும்பி வரைவதைத்தான் நான் விரும்புகிறேன். நான் அவளை ஒருநாளும் கட்டாயப்படுத்த மாட்டேன்.

இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, இனிப்பு தடவிய பாப்கார்ன் போன்றவற்றை அவளுக்கு கொடுப்பென். அதனை சுவைத்துக் கொண்டே அவள் வரையத் தொடங்குவாள்.

உலகிலேயே ஓவியம் தீட்டக்கூடிய ஒரே பன்றி Pigcasso தான். இவள் மூலம் பன்றிகள் புத்திசாலியானவை என்ற விடயம் உறுதியாகியிருக்கிறது. எதிர்காலத்தில் நியூயார்க்கிலும், பாரிஸிலும் Pigcasso-வின் ஓவியக் கண்காட்சியை நடத்த இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார். – Source: lankasee.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!