ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற இளம் பெண் என்ஜினீயர்!

மீஞ்சூர் பேரூராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளம் பெண் என்ஜினீயர் தெரிவித்துள்ளார்.

மீஞ்சூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டில் தி.மு.க. சார்பில் 23 வயதான இளம்பெண் என்ஜினீயர் சுகன்யா போட்டியிட்டார்.

நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சுகன்யா 454 ஓட்டுகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வனிதாவை விட ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் வினிதா 453 வாக்குகள் பெற்று இருந்தார். சுகன்யாவின் தந்தை வெங்கடேஷ் தி.மு.க. பிரமுகராக உள்ளார். தாய் சிவகாமி.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அனுபவம் குறித்து சுகன்யா கூறியதாவது:-

மீஞ்சூர் பேரூராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கல்லூரியில் படிக்கும் போதே மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்தேன். அரசியல் கட்சியில் இணைந்தால் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியும் என்பதால் கட்சி சார்பில் போட்டியிட்டேன்.

தெருவிளக்கு பிரச்சினை, மழை நீர் வடிகால் வசதி இப்பகுதியில் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனை சரிசெய்ய பாடுபடுவேன். மக்களுக்கு அடிப்படை தேவைகளுக்கு எப்போதும் என் குரல் ஒலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!