பைரவரை யாரெல்லாம் விரதம் இருந்து வழிபடலாம்…?

தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளை பைரவ வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் கடன் இல்லாத நிம்மதியை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பைரவர் உடைய திருப்பாதாங்களில் வைக்கும் எலுமிச்சை பழத்திற்கு அதீத சக்திகள் இருப்பதாக ஐதீகம் உள்ளது. பைரவர் சாட்சாத் சிவபெருமானின் அம்சமாகவே பார்க்கப்படுகிறார். மேலும் அவர் சனீஸ்வரரின் குருவாக இருப்பதால் சனி தோஷம் இருப்பவர்களும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்வது சனி பாதிப்புகளிலிருந்து குறைய செய்வதாக கூறப்படுகிறது.

அதிகமாக வாழ்க்கையில் கடன் வாங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளவர்களும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி என்று சனியின் வகை வகையான தோஷங்களில் பிடிபட்டுக்கொண்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சனி தோஷக்காரர்களும் அவருடைய குருவாக விளங்கும் பைரவரை நாளைக்கு கோவிலுக்கு சென்று வணங்கி பாருங்கள்! நிச்சயமாக உங்களுடைய துன்பங்கள் குறையும்.

சிவ ரூபத்தில் இருக்கும் பைரவருக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் தயிர் சாதம். தயிர் சாதத்தை நைவேத்யமாக செய்து கொண்டு கோவிலுக்கு சென்று பைரவருக்கு படைக்கலாம். அது போல் பைரவருக்கு செந்நிற மலர்கள் மிகவும் பிடித்தமானவை. செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் பல விதமான தோஷங்களில் இருந்து நீங்கி அதிர்ஷ்டமான யோகங்களை பெறலாம்.

சனிஸ்வர பகவானுக்கு எள் மூட்டையை வைத்து தீபம் ஏற்றுவது போல், பைரவருக்கு மிளகு முட்டை வைத்து தீபம் ஏற்றினால் தீராத எவ்வளவு கடன் இருந்தாலும் விரைவாக தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அதுபோல் ஒரு முழு எலுமிச்சையை அவருடைய திருவடியில் வைக்கப்பட்டு பின்பு அதனை வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேறி நல்ல சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கும். இதனால் வீட்டில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் எளிதாக நீங்கி ஒற்றுமை ஓங்கும்.

ஒரு சிறு சிகப்பு துணியில் மிளகுகளைப் போட்டு சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் பைரவருடைய அருளை நாம் முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம். மிளகு தீபம் ஏற்றினால் கடன் பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம். இழந்த செல்வத்தை, இழந்த பொருட்களை, யாரிடமாவது பணமாக கொடுத்து திரும்ப வராமல் இருந்தாலும், செவ்வாய்க் கிழமைகளில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம்.

பைரவர் அஷ்டகம், பைரவர் மூலமந்திரம் போன்ற மந்திரங்களை கோவிலில் அமர்ந்து ஜபிக்கும் பொழுது நீங்கள் மனதில் நினைத்தது எல்லாம் அப்படியே நிறைவேறும். மேலும் எம பயம் நீங்கவும், கெட்ட கனவுகளில் இருந்து மீளவும், வீரம் பெறவும் பைரவரை வழிபடலாம். நாயை வாகனமாக கொண்டுள்ள பைரவர் அருள் பெற உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் நாய்களுக்கு நாளை தேய்பிறை அஷ்டமியில் உணவை தானம் செய்யுங்கள்.

ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை வீட்டில் நாணயத்தால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட்டால் வருமானம் பெருகும். செல்வ வளம் அதிகரிக்கும். இத்தகைய பலன்களை நல்கும் பைரவரின் அருள் கிடைத்தால் வாழ்வில் யோகம் தான். அதனால் நாளைய நாளை தவற விட்டுவிடாதீர்கள். பைரவரை வணங்கி நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!