கொரோனா சிகிச்சைக்கு சென்ற சிறுமி… பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்!

ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதாக கூறி அழைத்து சென்று விபசாரத்தில் தள்ளிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தாய், மகளுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தாயும், 16 வயது மகளும் குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் பரிதாபமாக இறந்தார்.

அப்போது ஆஸ்பத்திரியில் சுவர்ணகுமாரி என்ற பெண் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவருக்கு ஆதரவாக இருப்பது போல் கவனித்து வந்தார்.

சிறுமியின் தந்தையிடம் உங்களது மகளுக்கு நாட்டு மருந்து மூலம் கொரோனாவை சரி செய்து விடுவதாக தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய சிறுமியின் தந்தை ஸ்வர்ண குமாரியுடன் சிறுமியை அனுப்பி வைத்தார். சிறுமியை அழைத்துச் சென்ற ஸ்வர்ண குமாரி விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு கடத்திச் சென்று அறைகளில் அடைத்து வைத்து சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமடைந்தது. இதையடுத்து சிறுமி விபச்சார கும்பலிடமிருந்து தப்பி குண்டூருக்கு வந்தார். நடந்த சம்பவங்களை தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை குண்டூர் போலீசில் புகார் செய்தார். குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு ஆரிப் ஹபீஸ் சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய ஸ்வர்ணகுமாரி மற்றும் 21 பேரை அதிரடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

நீதிபதி ஸ்ரீலதா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். நீதிபதியிடம் சிறுமி கடந்த 6 மாதங்களாக தனக்கு நடந்த கொடுமைகளை எடுத்துரைத்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி ஸ்ரீலதா சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய அனைவரையும் உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் விபச்சாரத்தில் சிறுமியுடன் ஈடுபட்ட ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 61 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியுடன் 82 பேர் விபசாரத்தில் இருந்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா, தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!