ஆப்ஸ்களிலுள்ள பிழைகளை கண்டுபிடித்து கோட்டீஸ்வரனாக மாறிய இந்தியர்!

இந்திய நிறுவனங்களும் தங்களின் ஆப்ஸ்களில் உள்ள பிழைகளை கண்டறிந்து திருத்தம் செய்ய தங்களை அணுகுவதாக அமன் பாண்டே தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரத்தைச் சேர்ந்த இளைஞர் அமன் பாண்டே. கூகுள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் ஆப்ஸ்களில் உள்ள பிழைகளை சொல்வதில் வல்லவர்.

அமன் பாண்டே கடந்த 2019-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் அப்ளிக்கேஷன் ஒன்றில் பிழைகள் இருப்பதை கண்டுபிடித்து கூகுள் நிறுவனத்திடம் தெரிவித்தார். இதற்கு பாராட்டு தெரிவித்த கூகுள் நிறுவனம் அமன் பாண்டேவுக்கு ரூ.70,000 சன்மானமாக வழங்கியது.

இந்த பணத்தைக் கொண்டு அமன் பாண்டே சிறிய அளவில் ‘பக்ஸ் மிர்ரர்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். சர்வதேச நிறுவனங்கள் தங்கள் அப்ளிக்கேஷன்களில் உள்ள பிழைகளை கண்டுபிடிக்க அமன் பாண்டேவை தேடி வருகின்றனர். இதற்காக தக்க சன்மானமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், கோட்டீஸ்வரனாக மாறிய அமன் பாண்டே ‘பக்ஸ் மிர்ரர்’ நிறுவனத்தை தற்போது பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இதுகுறித்து பக்ஸ் மிர்ரர் நிறுவனர் அமன் பாண்டே கூறியதாவது:-

நானும், துணை நிறுவனருமான மானாஸ் சேர்ந்து கூகுள் கீழ் இயங்கும் பல்வேறு அப்ளிக்கேஷன்களில் இருந்து சுமார் 600 பிழைகளை கண்டுப்பிடித்துள்ளோம்.

இதற்காக கூகுள் நிறுவனம் தங்களுக்கு கோடி கணக்கில் பணம் வழங்கியது. கூகுள் நிறுவனம் போல் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களின் ஆப்ளிக்கேஷன்களிலும் பிழைகளை கண்டுப்பிடித்துள்ளோம்.

சர்வதேச நிறுவனங்கள் தங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். தற்போது, இந்திய நிறுவனங்களும் தங்களின் ஆப்ஸ்களில் உள்ள பிழைகளை கண்டறிந்து திருத்தம் செய்ய எங்களை அணுகுகின்றனர்.

பக்ஸ் மிர்ரர் கம்பெனியில் 15 பேர் பணிப்புரிகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!