பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் 62 வயது பாச மூதாட்டி!

பெற்ற தாயின் நினைவாக மூதாட்டி ஒருவர் தாய்க்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட டிபன்ஸ்காலனி 4-வது தெருவில் வசிப்பவர் லட்சுமி (வயது 62).

இவர் தனது தாயான மறைந்த கன்னியம்மாளின் நினைவாக ரூ.20 லட்சம் செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார். தனக்கு வரும் பென்‌ஷன் தொகையின் ஒரு பகுதியை இந்த கோவிலுக்கு பூஜை செய்ய பயன்படுத்தி வருகிறார்.

மூதாட்டி லட்சுமி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்டெனோகிராபராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். கோவிலில் பூஜை செய்வதற்காக தனியாக பூசாரி ஒருவரையும் அவர் நியமித்து உள்ளார்.

கோவில்களில் நடப்பது போலவே தினசரி பூஜை, வழிபாடு நடக்கிறது. அங்கு கன்னியம்மாளுக்கு 4 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. லட்சுமியின் தாய் பாசகோவில் பற்றி அறிந்ததும் அப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர்.

இதுதொடர்பாக லட்சுமி கூறியதாவது:-

எனது தந்தை ஆறுமுகம் தாய் கன்னியம்மாளிடம் சண்டையிட்டு எங்களை தனியாக விட்டு சென்று விட்டார். ஒரே மகளான என்னை எனது தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். பல வீடுகளில் பாத்திரம் தேய்த்து என்னை படிக்க வைத்தார்.

தாயை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் திருமணமே செய்து கொள்ளவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு எனது தாய் இறந்து விட்டார். அவர் மறைந்தாலும் அவரது நினைவாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தேன். தாயின் சிலையை மாமல்லபுரம் ஸ்தபதி ஒருவர் வடிவமைத்து கொடுத்தார்.

கோவிலுக்குள் பிள்ளையார், நாகதேவதை, பாலமுருகன், வைஷ்ணவி, பிராமி மற்றும் நவக்கிரகங்கள் சிலைகளையும் வைத்துள்ளேன். பொதுமக்களும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!