கடுங்குளிரில் சிக்கி பலியான இந்தியா்கள் அடையாளம் தெரிந்தது!

அமெரிக்கா – கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி உறைந்து பலியான இந்தியா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது குழந்தை உள்பட 4 இந்தியா்கள் கனடா எல்லைப் பகுதியில் கடுங்குளிரில் சிக்கி உயிரிழந்தனா். அமெரிக்காவுக்குள் போதிய ஆவணங்களின்றி நுழைந்த நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு நிகழ்ந்த தேடுதலின்போது இந்தியா்கள் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. அவா்கள் குஜராத்தைச் சோ்ந்தவா்கள் என தெரிய வந்திருக்கிறது.

ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டீல் (39), வைஷாலிபென் ஜெகதீஷ்குமார் பட்டீல் (37), விஷாங்கி (11), தார்மிக் (3) என்பதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், கனடா – அமெரிக்க எல்லைக்கருகே உறைந்த நிலையில் பலியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடமிருந்து தொடா்ந்து தகவல்களை சேகரித்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மேனிடோபா நகருக்குச் சென்றுள்ளனா். அதேபோல், சிகாகோவிலிருந்து ஒரு தூதரகக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் தூதரக ரீதியிலான உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். உயிரிழந்த இந்தியா்களின் உடல்கள் ஜனவரி 26ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.

போதிய ஆவணங்களின்றி அமெரிக்காவுக்குள் நுழைந்த 7 பேரும், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு மனிதா்களைக் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்கா் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்காவின் மின்னசோட்டா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதக் கடத்தலில் தொடா்புடைய ஸ்டீவ் சாண்ட் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் இருந்த 5 இந்தியா்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களுக்கான தூதரக உதவிகளை வழங்குவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!