சிறுமியுடன் செல்போனில் பேசி ஏமாற்றி திருமணம் செய்த 2 குழந்தைகளின் தந்தை!

சென்னையில் இருந்து கிராமத்து திருவிழாவுக்கு சென்ற 14 வயது சிறுமியுடன் செல்போனில் பேசி ஏமாற்றி திருமணம் செய்த 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சென்னையில் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

மேற்கு முகப்பேரில் சகோதரியின் வீட்டில் இருந்தபடியே 10-ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என தந்தையான ஆட்டோ டிரைவர் ஆசைப்பட்டார்.

இந்த நிலையில் சிறுமியை விழுப்புரம் அருகில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு திருவிழாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்ற வாலிபர் சிறுமியை பார்த்துள்ளார்.

இதன் பிறகு சிறுமியின் செல்போன் நம்பரை வாங்கி சக்திவேல் அடிக்கடி பேச தொடங்கினார். தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும், உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் ஆசை வார்த்தைகளை சக்திவேல் அள்ளி வீசி இருக்கிறார்.

14 வயதே நிரம்பிய சிறுமி அறியாத பருவத்தில் சக்திவேலின் வலையில் விழுந்தார். அடிக்கடி சக்திவேல் சென்னைக்கு வந்து வெளியிடங்களுக்கு சிறுமியை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி சிறுமி திடீரென மாயமானார். இது தொடர்பாக நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமியை வாலிபர் சக்திவேல் ஏமாற்றி அழைத்து சென்று திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சக்திவேல் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே சக்திவேல் சிறுமியை தனது சொந்த ஊருக்கு கடத்திச் சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது.

பின்னர் அருகில் உள்ள ஒரு சிறிய குடிசை வீட்டில் சிறுமியை தங்க வைத்த சக்திவேல் அங்கு வைத்து பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதுபற்றி தகவல் தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சிறுமியை மீட்டனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுமி காப்பக்கத்தில் தங்க வைக்கப்பட்டார்.

சக்திவேலை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் சக்திவேல் தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி ஏமாற்றி சிறுமியை மயக்கி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. சிறுமிக்கு அது தெரியவந்ததும் அவருடன் சண்டை போட்டுள்ளார். இருப்பினும் சக்திவேல் அவரை சமாதானம் செய்து நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என கூறி ஏமாற்றி அழைத்து சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி சக்திவேல் தொடர்ந்து கொடுத்த தொல்லை காரணமாக படிப்பையும் பாதியில் நிறுத்தி உள்ளார். சிறுமியின் தந்தையான ஆட்டோ டிரைவருக்கு சக்திவேல் தொல்லை கொடுப்பது தெரிய வந்ததும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் சக்திவேல் விழுப்புரத்தில் இருந்து முகப்பேருக்கு வந்து சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.

சமீப காலமாக ஆன்லைன் வகுப்புகளின் ஆதிக்கம் அதிகமானதை அடுத்து தொடர்ச்சியாக சிறுமிகள் பலர் இதுபோன்று செல்போன் மூலம் ஏற்படும் பழக்கத்தால் திருமணமான இளைஞர்களுடன் பழகி திசை மாறி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் செல்போன்கள் மாணவிகளுக்கு பெரும் ஆபத்தாகவே திகழ்ந்து வருகின்றன என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் பெரிய உதாரணமாக உள்ளன.

எனவே பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும் தங்களது குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதில் கவனம் செலுத்தி அவர்களை கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதே நேரத்தில் சிறுமிகளை இதுபோன்று ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இளைஞர்களுக்கு கடுமையான தண்டனைகளை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக அமைந்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!