உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்!

தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.

இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது. அதாவது சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது ஆற்றல் உச்சம் பெறும். அதுவே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசத் தினத்தன்று தான் அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு அம்பிகை ‘வேல்’ வழங்கினார். எனவே தான் முருகனின் அருளைப்பெற விரும்புபவர்கள் தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.

தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். நோய்கள் ஏதேனும் இருந்தால் விலகி விடும்.

இதனால் தான் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது முக்கிய இடம் பிடித்துள்ளது. முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.

ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும், இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன். முருகனை வணங்கினால் எல்லாக்கடவுள்களையும் வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம்.

தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான்.

சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் கவனிக்க வேண்டியது….

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும்.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம்.

பூச நட்சத்திரக்காரர்கள் அய்யப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.

தை மாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் வருகின்ற இந்த தினம் ஒரு சிறப்பான தினமாகும். 27 நட்சத்திரங்களில் பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதையாக நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் இருக்கிறார். தந்தை ஆகிய சிவபெருமானுக்கு அவரின் மகன் முருகன் பிரணவ மந்திர பொருளை உபதேசித்து சிவகுருநாதன் என்கிற பெயரை பெற்று குரு ஸ்தானம் பெற்றார்.

எனவே இந்த தினத்தில் முருகப்பெருமானை வணங்குபவர்களுக்கு முருகன் மற்றும் குரு பகவானின் அருள் கிடைத்து நீங்கள் தொட்டே காரியங்கள் அனைத்து பொன்னாகும் அற்புதம் ஏற்படும். நீங்கள் திருமண சம்பந்த பேச்சு, புதிய தொழில் வியாபார ஒப்பந்தங்கள் போன்றவற்றை இந்த தை பூச நன்னாளில் சிவபெருமான், முருகனை வணங்கி தொடங்கினால் அவை நிச்சயமான வெற்றி பெற்று உங்களுக்கு பல நன்மைகளை தரும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!