அம்மாடியோவ்! குறி சொல்லும் சாமியாரிடம் இவ்வளவு தொகையா? அதிர்ச்சியடைந்த பொலீஸார்…!


வங்கிகளில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.2 கோடி வரை சுருட்டிய புகாரில் சென்னையில் மோசடி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சாமியாரின் பெயர் அரிகரன் (வயது 60).

இவர் சென்னை மவுலிவாக்கம் மதானந்தபுரத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி இறந்து விட்டார். இவருடைய ஒரே மகன் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

வீட்டில் நிறைய சாமி படங்களை வைத்து, பூஜை செய்து அரிகரன் குறி சொல்வாராம். இவரிடம் குறி கேட்க வருபவர்களிடம் நைசாக பேச்சுக்கொடுத்து வங்கிகளில் கடன் வாங்கித்தருகிறேன்.

நீங்கள் பெரிய அளவில் வருவீர்கள் என்று ஆசை வார்த்தை கூறுவாராம். இவரது ஆசை வார்த்தையில் மயங்கி வங்கிகளில் கடன் பெற்றுத்தரக்கோரி லட்சக் கணக்கில் கமிஷன் கொடுத்து ஏராளமான பேர் ஏமாந்துள்ளனர்.

சென்னை பெரியமேட்டில் தோல் கம்பெனி நடத்தி வரும் தொழில் அதிபர் பயாஸ் என்பவருக்கு ரூ.40 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி, கமிஷன் தொகையாக ரூ.2 லட்சத்தை சுருட்டியதாக சாமியார் அரிகரன் மீது பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.


இதேபோல 20-க்கும் மேற்பட்டோர் ரூ.2 கோடி வரை சுருட்டி விட்டதாக அரிகரன் மீது புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் அரிகரன் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் விமலன் ஆகியோர் மேற்பார்வையில் பெரியமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வகிதாபேகம் மோசடி சட்டப்பிரிவின் கீழ் அரிகரன் மீது வழக்குப்பதிவு செய்தார்.

சாமியார் அரிகரன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் வைத்திருந்த ஒரு சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மோசடி செய்த தொகையை அரிகரன் தனது வங்கி கணக்கிலேயே பெற்று ஏமாற்றி உள்ளார் என்றும், இதனால் அவரது மோசடி லீலைகளுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரிகரனிடம் ஏமாந்தவர்கள் பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!