பிரமாண்டமான பெரிய பெரிய பங்களாக்கள்… பீகாரில் ஒரு அதிசய திருட்டு கிராமம்!

திருட்டில் ஈடுபடுவது எப்படி? அதில் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது எப்படி? அப்படியே மாட்டிக்கொண்டால் போலீசாரிடம் உண்மையை கக்காமல் சமாளிப்பது எப்படி? என்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

ஆனால் உள்ளே சென்று பார்த்தால் அசந்து விடுவீர்கள். ஏனென்றால் பெரிய பெரிய பங்களாக்கள்.

பெரிய கோடீஸ்வரர் வீடுகளில் இருப்பது போன்ற விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்ட அறைகள் என ஆச்சரியப்படும் அளவுக்கு ஏதோ ஒரு வில்லா போல காட்சி அளிக்கிறது.

ஆனால் இங்கு வாழ்க்கை நடத்தும் அனைத்து குடும்பங்களும் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதுதான் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.

இந்த அதிசய திருட்டு கிராமம் பீகார் மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள ககிகார் மாவட்டம் கோதா பகுதியில் ஜீரப்கஞ்ச் என்ற கிராமம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

இங்கு சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது குல தொழிலாக திருட்டையே பிரதானமாக செய்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், சிறுவர்களை பள்ளிக்கு சென்று படிக்க வைப்பது இல்லை. அதற்கு மாறாக திருட்டு தொழிலை கற்பிக்கிறார்கள். அவர்களுக்கு திருடுவது எப்படி என்பது குறித்து பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

திருட்டில் ஈடுபடுவது எப்படி? அதில் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது எப்படி? அப்படியே மாட்டிக்கொண்டால் போலீசாரிடம் உண்மையை கக்காமல் சமாளிப்பது எப்படி? என்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பெரியவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி சிறுவர்கள் முதலில் சின்ன சின்ன திருட்டில் ஈடுபடுவார்கள். பிக்பாக்கெட். கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து திருடுவது என முதலில் அவர்கள் தனது தொழிலை தொடங்குவார்கள்.

பின்னர் அதில் கை தேர்ந்ததும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள், நகை கடைகளில் புகுந்து பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் பணம், நகைகள் சிக்கும். அதன் மூலம் அந்த கிராமமே குதூகலிக்கும்.

இந்த திருட்டு தொழிலை வழிநடத்த ஒரு தலைவரும் இருந்து வருகிறார்.கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கிராமத்தினர் தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் அந்த தலைவருக்கும் ஒரு பங்கினை கொடுப்பார்கள்.

இப்படி ஜெகஜோதியாக திருட்டு தொழில் இந்த கிராமத்தில் கொடிகட்டிப்பறக்கிறது.

கிராமத்தினர் தொழிலுக்கு புறப்படுவதற்கு முன் தங்களது குல தெய்வத்திற்கு பூஜை செய்து விட்டு தான் தொழிலுக்கு புறப்பட்டு செல்கின்றனர். பூஜை செய்யும் போது சமிக்கை கிடைத்தால் தான் அவர்கள் திருட்டுக்கு செல்வார்கள். இல்லையென்றால் தங்கள் திட்டத்தை கைவிட்டு விட்டு வேறு ஒருநாளில் செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

இந்த தொழிலால் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் ஜாலியான வாழ்க்கை நடத்திவருகிறார்கள். கை மற்றும் கழுத்து நிறைய நகைகளுடன் வெளியே சந்தோ‌ஷத்துடன் சுற்றி திரிகின்றனர். மேலும் கைநிறைய கட்டு, கட்டாக பணத்துடன் ஷாப்பிங் செய்வது. ஓட்டலுக்கு குழந்தை குட்டிகளுடன் வயிறு முட்ட விதவிதமாக உணவு பண்டங்களை சாப்பிடுவது, தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்ப்பது என தினமும் பொழுது போக்கி வருகின்றனர். பக்கத்து கிராம மக்களே பொறாமை படும் அளவிற்கு இவர்களது சொகுசு வாழ்க்கை அமைந்துள்ளது.

இவர்களது திருட்டு தொழிலுக்கு ஒத்துழைக்காதவர்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.

கிராம மக்களின் இந்த ஆடம்பர வாழ்க்கை தான் இப்போது அவர்களுக்கு ஆப்பு அடித்துள்ளது.

பெண்கள் கை நிறைய பணத்துடன் சுற்றி திரிவதால் போலீசாரின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் உஷாரான போலீசார் அந்த கிராமத்தில் யார்-யார் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது தொடர்பாக பட்டியல் தயாரித்து வருகிறார்கள். விரைவில் அவர்களை கைது செய்வோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!