அன்பறிவு திரைவிமர்சனம்!

நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிகை காஷ்மிரா
இயக்குனர் அஸ்வின் ராம்
இசை ஹிப் ஹாப் ஆதி
ஓளிப்பதிவு மகேஷ் மாணிக்கம்


மதுரையில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் மக்கள் செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறார் நெப்போலியன். அவரிடம் உதவியாளராக பணிபுரியும் விதார்த், அரசியலில் தனக்கு பதவி கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இதனிடையே விதார்த்தின் நண்பர் சாய் குமார், நெப்போலியன் மகளை திருமணம் செய்து கொள்கிறார்.

அந்த தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. இதனால் பதவி சாய் குமாருக்கு போக ஆத்திரம் அடையும் விதார்த், நெப்போலியன் குடும்பத்தை சதி செய்து பிரிக்கிறார். இரு குழந்தைகளும் தனித்தனியே வளர்கிறது. அப்பாவிடம் வளரும் அறிவு எப்படியாவது இந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கவேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். இறுதியில் பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் முறையாக இருவேடங்களில் நடித்திருக்கிறார். இரு கதாப்பாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பிக்காதது வருத்தம். நக்கல் கலந்த நடிப்பை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பு இயல்பாக இருந்தாலும், மற்ற கதையை போன்று கதாபாத்திரங்கள் இருப்பதால் சற்று தொய்வு ஏற்படுகிறது.

அட்லியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதை புதியதாக இல்லையென்றாலும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாரசியமாக எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவில் தொடர்ந்து இடம் பெறும் கதைகளை போன்று இக்கதையும் இருக்கிறது. சூர்யா நடித்த வேல் திரைப்படத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்களின் முணுமுணுப்பாக இருக்கிறது.

ஹிப் ஹாப் ஆதி படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்ற வைத்தாலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. யுவன் பாடிய ஒரு பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘அன்பறிவு’ அன்பு குறைவு.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!