சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்…!


வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் வடக்கில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.


வடக்கில் இதுவரை ஏனைய கட்சிகள் பாரிய தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தாத நிலையில், வன்னிப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் பெரியளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை பரந்தனிலும், ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிலும், தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.


திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பிலும், துணுக்காயிலும் இரண்டு பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. நேற்று மன்னார் மாவட்டத்தில் பாலிநகரிலும், மன்னாரிலும் இரண்டு பாரிய பொதுக் கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன.


இந்தக் கூட்டங்களில் இரா.சம்பந்தனுடன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் உள் ஒதுக்கீட்டில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரமுகர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களும் பங்கேற்று வருகின்றனர்.


இந்தக் கூட்டங்களில் முக்கிய பேச்சாளர்களாக இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் உரையாற்றி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.


அதேவேளை, நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பில் நடந்த கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்ற அனைவரும், காவல் துறையினரால் கடுமையாக சோதனையிடப் பட்டனர். உடற் பரிசோதனை செய்யப் பட்டதுடன், அவர்கள் கொண்டு சென்ற பொருட்களும் சோதனையிடப்பட்டன.


கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையினரின் பிரசன்னமும், சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்புக் கெடுபிடிகளும், பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. – Source: puthinappalakai.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!