பழிக்குப்பழியா..? கைதான குரங்குகள் பற்றி வெளியான தகவல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 250 நாய் குட்டிகளை கொன்றதாக கைது செய்யப்பட்ட குரங்குகள் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.

250 நாய் குட்டிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இரண்டு குரங்குகள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் சர்வதேச அளவில் செய்தியானது. இந்த சம்பவம் பற்றி பல செய்தி நிறுவனங்கள் விரிவான தகவல்களை பதிவு செய்தன.

இந்த நிலையில், குரங்குகள் பழிக்குப்பழியாக 250 நாய் குட்டிகளை கொன்றதா என்ற ஆய்வில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 நாய் குட்டிகள் பட்டினியால் உயிரிழந்தன என்று தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் வசிப்பவர்கள் பழிக்குப்பழியாக குரங்குகள் கொலை செய்ததாக தெரிவிக்கின்றனர்.

எனினும், விலங்குகளுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிடுவது அவற்றின் வழக்கம் தான் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன் இரண்டு பெரிய குரங்குகள் மற்றும் ஒரு குட்டி குரங்கு பிரிந்துவிட்டன. பிரிந்து சென்ற குட்டி குரங்கு, சில தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்துவிட்டது.

குட்டி குரங்கு உயிரிழந்தது தெரியாமல்- தாய் குரங்கு நாய் குட்டியை, தனது குட்டி என நினைத்து எடுத்து சென்றது. இவ்வாறு சென்ற போது, உணவின்றி பட்டினியால் நாய் குட்டி உயிரிழந்தது என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

250 நாய் குட்டிகள் உயிரிழந்ததாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட எண்ணிக்கையை யார் தெரிவித்தது என்ற விவரம் மர்மமாகவே இருக்கிறது. இதுபற்றி வனத்துறை சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவிலலை. தனது குட்டி என நினைத்து குரங்குகள் சுமார் 50 நாய் குட்டிகளை தூக்கி சென்றுள்ளன.

இதுபற்றி எந்த தகவலும் அறியாத அப்பகுதி மக்கள் வனத்துறையில் புகார் தெரிவித்தனர். புகாரை அடுத்து இரண்டு குரங்குகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்து சென்றனர். அந்த வகையில் குரங்குகள் நாய்குட்டிகளை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!