ஊருக்கே கறி விருந்து போட்டு… 120 வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி!

120-வது பிறந்த நாளை கொண்டாடிய வள்ளித்தாயிடம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் ஆசிர்வாதம் வாங்கிச்சென்றதுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள கிங் காலனியை சேர்ந்தவர் வள்ளித்தாய். இவரது 120-வது பிறந்தநாளை நேற்று அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து ஊருக்கே கறி விருந்து வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இந்த மூதாட்டிக்கு 3 மகன்கள், 4 மகள்கள் என 7 பேர் உள்ளனர். தொடர்ந்து பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளு பேத்தி, ஓட்டன், ஓட்டி உட்பட குடும்பத்தில் சுமார் 150 பேர் உள்ளனர்.

தலைமுறை பந்தங்கள் தொடர்ந்ததால் 5 தலைமுறை கண்ட இந்த மூதாட்டி பழைய காலத்து தானியங்கள் முதல் இந்த கால புரோட்டா வரை அனைத்தையும் விரும்பி சாப்பிடுவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தன்னுடைய சிறுவயதில் ஓலைச்சுவடி, ஓடுகள் மற்றும் தரையில் எழுதியதாகவும், மாட்டு வண்டி மட்டும் தான் இருந்ததாகவும், ஓட்டை துட்டு புழக்கத்தில் இருந்ததாகவும், மூதாட்டி தெரிவித்தார்.

எங்கு சென்றாலும் பல இடங்களுக்கும் நடந்தே தான் செல்லவேண்டும் என்றும் அந்த காலகட்டத்தில் சைக்கிள் கூட கிடையாது என்றார்.

இந்த மூதாட்டியின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

எவ்வளவு காசு பணம் சேர்த்தாலும் 100 வயதுக்கு மேல் அதிகமாக யாரும் இருப்பதில்லை என்றும் தனது பூட்டி பழைய காலத்து கதைகளை சொல்வதால் அவரிடம் பேசும்போது நேரம் போவதே தெரியாது என்றும் மூதாட்டியின் கொள்ளு பேரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அவரது மகன் வழி பேத்தி தெரிவிக்கையில் இதுவரை எந்த நோய் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், கண் பார்வையிலும் காது கேட்பதில் எந்த ஒரு குறைபாடும் இல்லை எனவும், தற்போது வரை பற்கள் இருப்பதாகவும் ஆச்சர்யத்துடன் தெரிவித்தார்.

120 -வது பிறந்த நாளை கொண்டாடிய வள்ளித்தாயிடம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் ஆசிர்வாதம் வாங்கிச்சென்றதுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!