இதெல்லாம் ஒரு காமெடி… அருவருப்பாக இருக்கு – சவுரவ் கங்குலி மீது விமர்சனம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி பேசிய விஷயம் ஒன்று இப்போது சர்ச்சையாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட சம்பவம் பலத்த விவாதங்களை கிளப்பியிருந்தது. விராட் கோலியே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு கங்குலி எந்தவித பதிலுமே தெரிவிக்கவில்லை. இது பற்றி பேசப்போவதில்லை. பத்திரிகையாளர்களை சந்திக்கப்போவதில்லை. நாங்களே பேசி முடிவெடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் பேசியிருந்தார்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கங்குலி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கங்குலியிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றனர். உங்களுக்கு எந்த வீரரின் அணுகுமுறை ரொம்ப பிடிக்கும்? என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி என பதிலளித்த கங்குலி கோலியின் அணுகுமுறை எனக்கு பிடிக்கும். ஆனாலும் அவர் அதிகமாக சண்டையிடுகிறார் என பேசியிருந்தார்.

அதே நிகழ்ச்சியில் கங்குலியிடம் இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது. அதாவது, ‘வாழ்வில் மன அழுத்தங்களை எப்படி கையாள்கிறீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு ‘வாழ்வில் மன அழுத்தங்கள் என்று எதுவும் இல்லை மனைவியையும், தோழியையும் தாண்டி’ என பேசியிருந்தார். இந்த பதில்தான் இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. நகைச்சுவை என நினைத்து கங்குலி பேசிய விஷயம் அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.

இந்த காலத்திலும் இதையெல்லாம் நகைச்சுவை என நம்பி ஒரு ஆள் அதுவும் கங்குலி மாதிரியான நபர் பேசுவது அருவருப்பாக இருப்பதாக பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!